நாட்டார் கால்வாயை தூர்வார நடவடிக்கை அமைச்சர் பாஸ்கரன் தகவல்


நாட்டார் கால்வாயை தூர்வார நடவடிக்கை அமைச்சர் பாஸ்கரன் தகவல்
x
தினத்தந்தி 25 Jun 2019 4:00 AM IST (Updated: 25 Jun 2019 12:34 AM IST)
t-max-icont-min-icon

மானாமதுரை பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரமான நாட்டார் கால்வாயை தூர் வார நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கூறினார்.

மானாமதுரை,

வைகை ஆற்றில் நீர்வரத்து காலங்களில் அன்னவாசல், கிளங்காட்டூர், கரிசல்குளம் உள்ளிட்ட 16 கிராம விவசாயிகள் பயன்பெறும் வண்ணம் தண்ணீர் கொண்டு செல்ல 1999–ம் ஆண்டு நாட்டார் கால்வாய் வெட்டப்பட்டது.

ராஜகம்பீரம் புதூர் கண்மாயில் இருந்து கால்வாய்கள் மூலம் வரிசையாக வளநாடு, அன்னவாசல், கிளங்காட்டூர், கரிசல்குளம் கண்மாய்கள் நிரம்பி மீண்டும் வைகை ஆற்றில் இணையும் வண்ணம் நாட்டார் கால்வாய் வெட்டப்பட்டது.

நாட்டார் கால்வாய் வெட்டப்பட்டு பல வருடங்கள் ஆன நிலையில் கால்வாய் முழுவதும் கருவேல மரங்கள் அடர்ந்து காணப்படுகிறது. பல இடங்களில் செடிகள் மண்டி புதர் போல காட்சியளிக்கிறது. கடந்த 7 ஆண்டுகளாக மழை இல்லாததால் கிளங்காட்டூர், அன்னவாசல் உள்ளிட்ட பகுதி கண்மாய்கள் வறண்டு நிலத்தடி நீர் அதல பாதாளத்திற்கு சென்றுவிட்டது.

விவசாயம் இல்லாததால் விவசாயிகள் பலரும் பிழைப்பு தேடி வெளியூர்களுக்கு சென்றுவிட்டனர். கால்நடைகள் குடிக்க கூட தண்ணீர் இல்லாததால் கால்நடை வளர்ப்பும் குறைந்து விட்டது. நாட்டார் கால்வாய் பாசன சங்க தலைவர் துபாய் காந்தி கூறுகையில், நாட்டார் கால்வாயில் தண்ணீர் வராததால் கண்மாய்கள் அனைத்தும் வறண்டு விட்டன.

கால்நடைகளுக்கும் தண்ணீர் இல்லை. நிலத்தடி நீரும் உவர்ப்பு தன்மை கொண்டதாக மாறி வருகிறது. தமிழக அரசு குடிமராமத்திற்கு நிதி ஒதுக்கி உள்ள நிலையில் நாட்டார் கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இந்தநிலையில் மானாமதுரை அருகில் உள்ள மீனாட்சிபுரம் வைகை ஆற்றில் பகுதியில் நடைபெறும் தடுப்பணை பணியை பார்வையிட வந்த அமைச்சர் பாஸ்கரனிடம் விவசாயிகள் நாட்டார் கால்வாய் குறித்து மனு கொடுத்தனர். அப்போது அவர் கூறும்போது, நாட்டார் கால்வாய் முதல்–அமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பரிசீலிக்கப்பட்டுள்ளது. எனவே விரைவில் நாட்டார் கால்வாய் தூர்வாரி தண்ணீர் வர நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

எனவே கண்டிப்பாக நாட்டார் கால்வாயில் விரைவில் குடிமாரத்து பணிகள் நடைபெறும் என்றார். இதில் எம்.எல்.ஏ. நாகராஜன், முன்னாள் ஒன்றிய செயலாளர் ஜெயபிரகாஷ், முன்னாள் சேர்மன் மாரிமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story