பூதலூர் அருகே டாஸ்மாக்கடை திறக்கும் முயற்சியை கைவிட வேண்டும் குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்கள் மனு


பூதலூர் அருகே டாஸ்மாக்கடை திறக்கும் முயற்சியை கைவிட வேண்டும் குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்கள் மனு
x
தினத்தந்தி 24 Jun 2019 11:00 PM GMT (Updated: 24 Jun 2019 7:05 PM GMT)

பூதலூர் அருகே டாஸ்மாக்கடை திறக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்கள்மனுஅளித்தனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திங்கட் கிழமை தோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு மனுக்களை அளித்தனர்.

தஞ்சை மாவட்டம் பூதலூர் அருகே உள்ள அலமேலுபுரம்பூண்டி, விஷ்ணம்பேட்டை கிராம மக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

எங்கள் பகுதியில் 5 ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு கொள்ளிடக்கரை ஓரம் அரசு டாஸ்மாக்கடை அமைப்பதற்கான பணி தொடங்கப்பட்டது. அந்த இடம் விவசாய நிலம் ஆகும். இங்கு டாஸ்மாக்கடை அமைப்பதால் எங்கள் பகுதி பள்ளி, கல்லூரி மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாவதோடு, விவசாயமும் பாதிக்கப்படும். எனவே எங்கள் ஊரில் திறக்கக்கூடாது என மனு கொடுத்தோம். ஆனால் அதிகாரிகள் அது விளைநிலம் அல்ல, தரிசு நிலம் என்று கூறி உள்ளனர்.

இதையடுத்து அது விவசாய நிலம் என்றும் அங்கு டாஸ்மாக்கடை திறக்கக்கூடாது என்று நாங்கள் பொது நல வழக்கு தொடர்ந்தோம். இதையடுத்து அங்கு கடையை திறக்கக்கூடாது என்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும் கடையை திறக்க முயற்சி நடைபெற்று வருகிறது. அவ்வாறு கடை திறந்தால் நாங்கள் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம். எனவே டாஸ்மாக்கடை திறக்கும் முயற்சியை கைவிட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் அதில் கூறி உள்ளனர்.

ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் தில்லைவனம், அரசு பணியாளர் சங்க மாநில துணைத்தலைவர் திருநாவுக்கரசு தலைமையில் தமிழ்நாடு பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் சங்கத்தினர் மாவட்ட தலைவர் சுந்தரலிங்கம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

தஞ்சை மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்களில் 64 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. இதில் 138 பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் நிலையில் இவர்களுக்கு தினக்கூலியாக ரூ.377 மட்டுமே வழங்கப்படுகிறது ஆனால் இதே பணியாளர்களுக்கு அரியலூர் மாவட்டத்தில் ரூ.478, கன்னியாகுமரி மாவட்டத்தில் ரூ.490, திருவண்ணாமலை மாவட்டத்தில் ரூ.450 வழங்கப்படுகிறது. இந்நிலையில் விலைவாசி உயர்வு, பஸ் கட்டண உயர்வு, குழந்தைகளின் கல்விச்செலவு ஆகியவற்றால் அவதிப்படும் எங்களுக்கு தஞ்சை மாவட்டத்தில் தினக்கூலி ஊதியத்தை மற்ற மாவட்டங்களை போல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார்.

சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் ஜெயபால் தலைமையில் துணை செயலாளர்கள் அன்பு, பேர்நீதிஆழ்வார் ஆகியோர் முன்னிலையில் தூய்மைக்காவலர்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்ப தாவது:-

தஞ்சையை அடுத்த நாஞ்சிக்கோட்டை ஊராட்சியில் தூய்மைக்காவலர்களாக பணியமர்த்தப்பட்டு ஊராட்சி முழுவதும் தூய்மைப் பணியை மேற்கொண்டு வரும் தொழிலாளர்களுக்கு 100 நாள் வேலைக்கான ஊதியம் வழங்கப்பட்டு வந்தது. தற்போது தினக்கூலியாக ரூ.80 மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. இதனால் குடும்பம் நடத்த முடியாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வறுமையோடு தூய்மைப்பணியை மேற்கொள்ளும் எங்களுக்கு தினக்கூலி ரூ.205 தொடர்ந்து வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் அதில் கூறி உள்ளனர்.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க நகர செயலாளர் ராஜன் கொடுத்த மனுவில், “தஞ்சை மேம்பாலம் அருகில் செயல்பட்டு வரும் பார்வையற்றோர் மேல்நிலைப்பள்ளி கழிவறையில் உறிஞ்சி எடுக்கக்கூடிய, கழிவுகளை சுமந்து செல்லக்கூடிய டேங்கர் லாரி இல்லாததால், கழிவுகள் வெளிப்பகுதியில் செல்கிறது. இதனால் பள்ளியிலும், விடுதியிலும் துர்நாற்றம் வீசுகிறது. கழிவுகளை உறிஞ்சக்கூடிய மின் மோட்டாரை இயக்குவதற்கு ஆள் இல்லை. மேலும் சுவிட்ச் பாக்ஸ் வெளிப்புறத்தில் திறந்த வெளியில் உள்ளது. இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இதற்கும் மாற்று ஏற்பாடு செய்து தர வேண்டும்” என்றார். 

Next Story