பெரியாறு பாசன கால்வாயை நீட்டிக்க வலியுறுத்தி மதுரை நோக்கி வாகனங்களில் புறப்பட்ட 70 கிராம மக்கள்; போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு


பெரியாறு பாசன கால்வாயை நீட்டிக்க வலியுறுத்தி மதுரை நோக்கி வாகனங்களில் புறப்பட்ட 70 கிராம மக்கள்; போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு
x
தினத்தந்தி 24 Jun 2019 11:30 PM GMT (Updated: 24 Jun 2019 7:16 PM GMT)

பெரியாறு பாசன கால்வாயை நீட்டிக்க வலியுறுத்தி 70 கிராம மக்கள் நேற்று மதுரை நோக்கி பல்வேறு வாகனங்களில் புறப்பட்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலூர்,

மதுரை மாவட்டத்தின் எல்லை பகுதியில் அமைந்துள்ளது, கொட்டாம்பட்டி. கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றிய பகுதியில் கொட்டாம்பட்டி, சேக்கிப்பட்டி உள்பட 16 ஊராட்சிகளை சேர்ந்த 70–க்கும் மேற்பட்ட கிராமங்கள் வானம் பார்த்த பூமியாக உள்ளன. பருவமழை பொய்த்து போனதால் அப்பகுதியில் விவசாயம் முற்றிலும் முடங்கியது. இதனால் கொட்டாம்பட்டி ஒன்றிய கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், தங்களுக்கு முல்லைப்பெரியாறு பாசன கால்வாயை நீட்டிப்பு செய்து பாசனத்திற்கு தண்ணீர் வழங்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இதுவரை அதற்கான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.

இதற்கிடையே அப்பகுதியை சேர்ந்த கிராம பெரியவர்கள் ஆலோசனையின்பேரில் இளைஞர்கள் சமூக வலைதளம் வழியாக ஒன்றிணைந்து பொதுமக்களின் ஆதரவை திரட்டி பெரியாறு பாசன கால்வாயை நீட்டிக்க வலியுறுத்தி மதுரை கலெக்டர் அலுவலகம் நோக்கி நடைப்பயணம் மேற்கொள்ள முடிவு செய்தனர். அதன்படி கடந்த 22–ந்தேதி அவர்கள் 70 கிராம மக்கள் நடைப்பயணம் தொடங்கினர். அப்போது அவர்களை சந்தித்து பெரியபுள்ளான் எம்.எல்.ஏ. ஆதரவு தெரிவித்ததுடன், பேச்சுவார்த்தை நடத்தினார். இருப்பினும் கிராம மக்கள் வாகனங்களில் சென்று கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க முடிவு செய்திருந்தனர்.

இந்தநிலையில் நேற்று கொட்டாம்பட்டி, சேக்கிப்பட்டி உள்ளிட்ட 16 ஊராட்சிகளுக்கு உட்பட்ட 70 கிராமங்களை சேர்ந்த மக்கள் ஒன்று திரண்டு பல்வேறு வாகனங்களில் மதுரைக்கு புறப்பட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த மேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சுபாஷ் தலைமையிலான போலீசார் அழகர்கோவில் அருகில் கிராம மக்கள் வந்த அனைத்து வாகனங்களையும் தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கூடுதல் போலீசாரும் அங்கு குவிக்கப்பட்டனர்.

தகவலறிந்த மேலூர் எம்.எல்.ஏ. பெரியபுள்ளான், போராட்டம் நடத்திய கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது தொகுதி மக்களின் கோரிக்கையை முதல்–அமைச்சரிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தற்போது பிரதிநிதிகள் 50–க்கும் மேற்பட்டோரை அழைத்துச்சென்று கலெக்டரிடம் மனு கொடுக்கலாம் என்று கூறி சமரசம் செய்தார். இதையடுத்து 50 பிரதிநிதிகளை தன்னுடன் அழைத்து கொண்டு பெரியபுள்ளான் எம்.எல்.ஏ. மதுரை கலெக்டர் அலுவலகம் சென்றார்.

பின்னர் பெரியபுள்ளான் எம்.எல்.ஏ. மற்றும் கிராம மக்களின் பிரதிநிதிகள் 50 பேர் சேர்ந்து கலெக்டர்(பொறுப்பு) சாந்தகுமாரிடம் மனு கொடுத்தனர். மனுவை பெற்று கொண்ட கலெக்டர், அதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


Next Story