சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் கலெக்டரிடம், கிராம மக்கள் கோரிக்கை


சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் கலெக்டரிடம், கிராம மக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 25 Jun 2019 4:00 AM IST (Updated: 25 Jun 2019 12:50 AM IST)
t-max-icont-min-icon

சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் ஷில்பாவிடம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நெல்லை,

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள வளர்ச்சிமன்ற கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கினார்.

மானூர் அருகே உள்ள அலவந்தான்குளத்தை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில், “எங்கள் கிராமத்தில் சுமார் 1,500 குடும்பங்கள் வசித்து வருகின்றன. எங்கள் பகுதியில் உள்ள குடிநீர் தேக்க தொட்டி பழுதடைந்துள்ளது. அரசு சார்பில் அந்த பகுதியில் ஆய்வு செய்யப்பட்டு சுற்றியுள்ள கிராம பகுதியில் 4 குடிநீர் தேக்க தொட்டிகள் கட்டப்பட்டன. அலவந்தான்குளம் ஊருக்கு மேற்கே உள்ள நீர்த்தேக்க தொட்டியில் இருந்து 8 நாட்களுக்கு ஒரு முறை தான் தண்ணீர் வருகிறது. ஊருக்கு கீழ் பகுதியில் உள்ள நீர்த்தேக்க தொட்டியில் இருந்து 3 நாட்களுக்கு ஒரு முறை தான் குடிதண்ணீர் வருகிறது. எனவே சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறப்பட்டு இருந்தது.

மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க தலைவர் மாரியப்ப பாண்டியன் தலைமையில் பொதுமக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில், “நெல்லையை அடுத்த ராமையன்பட்டி பஞ்சாயத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் முறைகேடு நடக்கிறது. வேலை செய்ததாக பதிவேட்டில் போலியாக பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதனால் அரசுக்கு இழப்பு ஏற்படுகிறது. கலெக்டர், நேரடியாக தணிக்கை குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும். முறைகேடு செய்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறப்பட்டு இருந்தது.

நாம் தமிழர் கட்சியின் மாவட்ட பிரதிநிதி பிரவின் பெரியசாமி தலைமையில் கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்ட மனுவில், “பாளையங்கோட்டையை அடுத்த மணப்படை வீடு பகுதியில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் கிராம மக்களுக்கு சரியாக வேலை கொடுக்கவில்லை. இந்த திட்டத்தில் தொடர்ந்து வேலை வழங்க வேண்டும்“ என்று கூறப்பட்டுள்ளது.

கடையம் அருகே உள்ள மந்தியூரை அடுத்த பிள்ளைகுளத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் இளங்கோ தலைமையில் கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது. அதில், “எங்கள் பகுதியில் புதிதாக ஆட்டோ நிறுத்தம் அமைக்க அனுமதி வழங்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

வீரகேரளம்புதூர் அருகே உள்ள குலையனேரியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், நாங்கள் பீடி சுற்றி வாழ்க்கை நடத்தி வருகிறோம். ஒரு தனியார் நிறுவனத்தில் எங்கள் ஊரை சேர்ந்த பலர் முன்வைப்பு தொகை செலுத்தினோம். பணம் முதிர்ச்சியடைந்த பிறகும் அந்த நிறுவனம் பணம் கொடுக்கவில்லை. தற்போது அந்த நிறுவனம் மூடப்பட்டுள்ளது. எங்கள் ஊரை சேர்ந்தவர்களிடம் மட்டும் அந்த நிறுவனம் ரூ.50 லட்சம் மோசடி செய்துள்ளது. பணம் திருப்பி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

ஆதி தமிழர் கட்சியின் (தமிழ்நாடு) நெல்லை மாவட்ட துணை செயலாளர் ராமமூர்த்தி தலைமையில் கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது. அதில், “பாளையங்கோட்டையில் நெல்லை சட்டக்கல்லூரி எதிரே சுதந்திர போராட்ட வீரர் ஒண்டி வீரனாருக்கு மணி மண்டபம் அமைக்கப்பட்டது. அதன் அருகே 54 சென்ட் நிலத்தில் கல்வெட்டான் குழி இருக்கிறது. அதை மாவட்ட நிர்வாகம் சீரமைக்க வேண்டும்“ என்று கூறப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்ட பொதுஜன நலச்சங்க தலைவர் முகமதுஅய்யூப் தலைமையில் கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது. அதில், “நெல்லை பேட்டை மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 40-க்கும் மேற்பட்ட தெருநாய்களை மர்ம நபர்கள் விஷம் வைத்து சாகடித்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அதை ஆய்வு செய்து நாய்களை சாகடித்த மர்ம நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

கடையநல்லூர் அருகே உள்ள ஊர்மேலழகியான் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், “கடையநல்லூர் யூனியன் பகுதியில் உள்ள சின்னப்பனையங்குளம் கிராமத்தை தூர்வாரி ஊர்மேலழகியான், சின்னப்பனையங்குளம் கிராமங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயர நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் விவசாய பயன்பாட்டுக்கும் தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்“ என்று கூறப்பட்டுள்ளது.

ம.தி.மு.க. சங்கர்நகர் பேரூர் கழக செயலாளர் முருகன் கொடுத்த மனுவில், “நெல்லையை அடுத்த சங்கர்நகர் பகுதியில் உள்ள பண்டார குளத்தை தனியார் அபகரித்து பிளாட் போட்டு விற்பனை செய்ய முயற்சி செய்கிறார்கள். அதை தடுத்து நிறுத்த வேண்டும். பண்டாரகுளத்தில் அனைத்து பஸ்களும் நின்று செல்ல வேண்டும்“ என்று கூறப்பட்டுள்ளது.

Next Story