ஊட்டியில் ஏலச்சீட்டு நடத்தி, மத்திய, மாநில அரசு ஊழியர்களிடம் ரூ.1 கோடி மோசடி - போலீஸ் சூப்பிரண்டிடம் புகார்
ஊட்டியில் ஏலச்சீட்டு நடத்தி மத்திய, மாநில அரசு ஊழியர்களிடம் ரூ.1 கோடி மோசடி செய்து உள்ளதாக போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளிக்கப்பட்டது.
ஊட்டி,
நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு ஊட்டி, பிங்கர்போஸ்ட், கோவை உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் நேற்று வந்தனர். அவர்கள் போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-
ஊட்டி ரோகிணி பகுதியை சேர்ந்த தாசப்பா என்பவர் ஊட்டி தலைமை தபால் அலுவலகத்தில் துணை தபால் அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். அவர் ஏலச்சீட்டு நடத்தி வந்தார். அவரிடம் ஊட்டி தலைமை தபால் அலுவலக ஊழியர்கள், பி.எஸ்.என்.எல். ஊழியர்கள், மாநில அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் என 50-க்கும் மேற்பட்டோர் ரூ.5 லட்சம், ரூ.3 லட்சம், ரூ.2½ லட்சம் ஆகிய பிரிவுகளில் உறுப்பினர்களாக சேர்ந்தோம். நாங்கள் ஏலச்சீட்டில் சேரும்போது, தாசப்பாவிடம் பண பெற உத்தரவாதத்திற்கு நிரப்பப்படாத வங்கி காசோலைகள், வீட்டு பத்திரங்கள், கடன் பத்திரங்களை கையெழுத்திட்டு வழங்கி உள்ளோம்.
இந்த நிலையில் கடந்த மாதம் தாசப்பா திடீரென தற்கொலை செய்துகொண்டதாக தெரியவந்தது. இதுகுறித்து நாங்கள் அவரது குடும்பத்தினரிடம் பணம் மற்றும் ஆவணங்களை திருப்பி கேட்ட போது, பணம் தர முடியாது, ஆவணங்களையும் தர முடியாது என்று தெரிவித்து விட்டனர். நாங்கள் தாசப்பாவிடம் ரூ.1 கோடிக்கு மேல் ஏலச்சீட்டுக்காக கொடுத்து இருக்கிறோம். இந்த மோசடியால் நாங்கள் பாதிக்கப்பட்டு உள்ளோம். எனவே எங்களது பணத்தையும், ஆவணங்களையும் மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள பல கிராமங்களில் ஏழை மக்களுக்கு வீடு கட்டி தருவதாகவும், கடன் தொகை வழங்குவதாகவும், இருசக்கர வாகனங்கள் வாங்கி தருவதாகவும் கூறி கோவை, திருச்சி, கரூர், சேலம் ஆகிய இடங்களை சேர்ந்த சிலர் தனியார் அறக்கட்டளை என்ற பெயரை பயன்படுத்தி பெண்களை ஏமாற்றி குழுக்கள் அமைத்து, குறிப்பிட்ட பணத்தை பெற்று உள்ளனர். அவர்கள் பணத்தை திரும்ப கொடுக்காமல் பல லட்சம் ரூபாய் ஏமாற்றியது குறித்து புகார்கள் போலீசில் பதிவாகி உள்ளது.
Related Tags :
Next Story