உளுந்தூர்பேட்டை பகுதியில் பலத்த மழை, மின்னல் தாக்கி விவசாயி பலி


உளுந்தூர்பேட்டை பகுதியில் பலத்த மழை, மின்னல் தாக்கி விவசாயி பலி
x
தினத்தந்தி 24 Jun 2019 4:00 AM IST (Updated: 25 Jun 2019 1:16 AM IST)
t-max-icont-min-icon

உளுந்தூர்பேட்டை பகுதியில் நேற்று பலத்த மழை பெய்தது. இதில் மின்னல் தாக்கியதில் விவசாயி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

உளுந்தூர்பேட்டை, 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. ஆனால் விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று காலை முதல் மாலை வரை வெயில் சுட்டெரித்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். இந்த நிலையில் உளுந்தூர்பேட்டை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மாலை 4 மணியளவில் வானில் கருமேகங்கள் திரண்டன. தொடர்ந்து குளிர்ந்த காற்று வீசத்தொடங்கியது. பின்னர் 4.30 மணியளவில் மழை பெய்யத்தொடங்கியது. நேரம் செல்ல செல்ல இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சுமார் 1 மணி நேரம் இந்த மழை பெய்தது. இந்த பலத்த மழையால், சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதுடன், தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. மேலும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் மழையில் நனைந்த படி சென்றதை காணமுடிந்தது.

இதேபோல் தியாகதுருகம் பகுதியிலும் நேற்று இரவு மழை பெய்தது.

இதற்கிடையே இந்த கனமழையின் போது மின்னல் தாக்கியதில் விவசாயி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். அதன் விவரம் வருமாறு:-

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள குமாரமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் கணபதி மகன் முருகன்(வயது 40), விவசாயி. இவர் நேற்று மாலை அதே பகுதியில் தனது மாடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டிச்சென்றார். அப்போது திடீரென இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதில் மின்னல் தாக்கியதில் முருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றிய தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பலியான முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உளுந்தூர்பேட்டை அன்னை சத்யா தெருவை சேர்ந்த கோதண்டபாணி. இவர் தனக்கு சொந்தமான பசுமாட்டை வீட்டின் பின்புறம் உள்ள கொட்டகையில் கட்டியிருந்தார். இந்த நிலையில் நேற்று மாலை 4.30 மணியளவில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதில் மின்னல் தாக்கியதில் அந்த பசுமாடு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக செத்தது.

Next Story