சுடுகாட்டுக்கு சாலை வசதி கேட்டு தூத்துக்குடியில் முதியவர் நூதன போராட்டம் இறந்தவர்போல் வந்து மனு கொடுத்தார்


சுடுகாட்டுக்கு சாலை வசதி கேட்டு தூத்துக்குடியில் முதியவர் நூதன போராட்டம்  இறந்தவர்போல் வந்து மனு கொடுத்தார்
x
தினத்தந்தி 25 Jun 2019 3:30 AM IST (Updated: 25 Jun 2019 1:55 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் சுடுகாட்டுக்கு சாலை வசதி கேட்டு இறந்தவர்போல் வந்து நூதன முறையில் போராட்டம் நடத்திய முதியவரால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகா கீழவல்லநாடு சரகத்துக்கு உட்பட்ட செட்டிமல்லன்பட்டியை சேர்ந்தவர் ராஜசேகரன்(வயது 66). இவர் அந்த பகுதியை சேர்ந்த சிலருடன் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார்.

அவர் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்குக்குள் சென்ற உடன் திடீரென கழுத்தில் மாலை அணிந்து கொண்டும், நாடியில் துணியால் கட்டிக் கொண்டும் இறந்தவர்போல் கூட்ட அரங்குக்குள் படுத்து நூதன போராட்டம் நடத்தினார். உடனடியாக அங்கு போலீசார் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் ராஜசேகரனை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

அப்போது, ராஜசேகரன் மாவட்ட வருவாய் அலுவலரிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தார். அந்த மனுவில், செட்டிமல்லன்பட்டியில் இருந்து சுடுகாட்டுக்கு செல்லும் பாதை கடந்த 13 ஆண்டுகளாக தனிநபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது.

இதனால் இறந்தவர்களின் உடல்களை கொண்டு செல்ல முடியாமல் சிரமப்பட்டு வருகிறோம். எனவே, தனிநபர் ஆக்கிரமிப்பில் உள்ள சுடுகாடு பாதையை மீட்டு, சாலை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.

சுடுகாட்டுக்கு சாலை வசதி கேட்டு இறந்தவர்போல் வந்து முதியவர் நூதன போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story