சென்னையில் 6 இடங்களில் பெண்களிடம் சங்கிலி பறித்த மோட்டார்சைக்கிள் கொள்ளையர்கள் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சி வெளியீடு


சென்னையில் 6 இடங்களில் பெண்களிடம் சங்கிலி பறித்த மோட்டார்சைக்கிள் கொள்ளையர்கள் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சி வெளியீடு
x
தினத்தந்தி 25 Jun 2019 4:45 AM IST (Updated: 25 Jun 2019 1:57 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் 2 நாளில் 6 பெண்களிடம் சங்கிலி பறித்த கொள்ளையர்கள், மேலும் 2 பேரிடம் சங்கிலி பறிக்க முயன்றனர். கண்காணிப்பு கேமராவில் பதிவான கொள்ளையர்களின் புகைப்படத்தை போலீசார் வெளியிட்டு உள்ளனர்.

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த ஆதம்பாக்கம் நிலமங்கை நகர் அவ்வையார் தெருவை சேர்ந்தவர் முத்துலட்சுமி (வயது 65). இவர், அதே பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் திடீரென முத்துலட்சுமியின் கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர். இதுபற்றி ஆதம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பெரும்பாக்கம்

இதேபோல் பெரும்பாக்கம் இந்திரா நகர் பல்லவ மன்னர் தெருவை சேர்ந்தவர் பாலம்மா(75). பூ வியாபாரம் செய்து வருகிறார். இவர், தனது வீட்டின் அருகே நடந்து சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர், பாலம்மா கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றுவிட்டார்.

இதுபற்றி பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம வாலிபரை தேடி வருகின்றனர்.

மயிலாப்பூர்

மயிலாப்பூரை சேர்ந்தவர் கபாலி. இவருடைய மனைவி சாந்தா(65). இவர், மயிலாப்பூர் மூண்டககண்ணியம்மன் கோவில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள், சாந்தா கழுத்தில் அணிந்து இருந்த 1 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர். இது குறித்து மயிலாப்பூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சங்கிலி பறிக்க முயற்சி

கோட்டூர்புரம் ஏரிக்கரை சாலையை சேர்ந்தவர் குணசீலன். இவருடைய மனைவி செல்வி(45). அதே பகுதியில் நடந்த ஒரு திருமணத்துக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், செல்வியின் கழுத்தில் இருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறிக்க முயன்றனர். சுதாரித்துக்கொண்ட செல்வி, நகையை கெட்டியாக பிடித்துக்கொண்டு கொள்ளையர்களுடன் போராடினார். இதனால் அவரை சாலையில் சிறிது தூரம் கொள்ளையர்கள் தரதரவென இழுத்து சென்றனர்.

செல்வியின் அலறல் சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்ததால் கொள்ளையர்கள் தப்பிச்சென்று விட்டனர். இதில் காயம் அடைந்த செல்வி, ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இதுபற்றி கோட்டூர்புரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ராயப்பேட்டை

சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த ஜெயலட்சுமி(32), ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலம் அருகே நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள், ஜெயலட்சுமியின் கழுத்தில் கிடந்த 5 பவுன் சங்கிலியை பறிக்க முயன்றனர்.

சங்கிலியை பறிக்க விடாமல் கொள்ளையர்களுடன் போராடிய ஜெயலட்சுமியின் கூச்சல் கேட்டு அருகில் இருந்த ஆட்டோ டிரைவர்கள், பொதுமக்கள் ஓடிவந்ததால் சங்கிலியை பறிக்காமல் கொள்ளையர்கள் தப்பிச்சென்று விட்டனர்.

புகைப்படம் வெளியீடு

இந்த நிலையில் மயிலாப்பூர் பகுதியில் மோட்டார்சைக்கிளில் சென்று சங்கிலி பறிப்பில் ஈடுபட்டதாக கண்காணிப்பு கேமராவில் பதிவான கொள்ளையர்கள் 2 பேரின் புகைப்படத்தை நேற்று போலீசார் வெளியிட்டு உள்ளனர்.

சென்னை மயிலாப்பூர், மடிப்பாக்கம் என கடந்த 2 நாட்களில் மட்டும் சென்னையில் 8 இடங்களில் சங்கிலி பறிப்பு சம்பவம் அரங்கேறி உள்ளது. இதில் 6 இடங்களில் பெண்களிடம் சங்கிலியை பறித்து உள்ளனர். 2 இடங்களில் சங்கிலியை பறிக்க முயன்று, பொதுமக்கள் வந்து விட்டதால் ஏமாற்றத்துடன் சென்று விட்டனர்.

இதில் 5 இடங்களில் இந்த கொள்ளையர்கள் இருவரும் கைவரிசையை காட்டி இருப்பது தெரிய வந்துள்ளது. கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து உள்ளனர். புகைப்படத்தில் உள்ள கொள்ளையர்கள் பற்றி பொதுமக்கள் யாருக்காவது தெரியவந்தால் உடனடியாக மயிலாப்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கும்படி போலீசார் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

Next Story