4 ஆயிரம் ஏக்கருக்கு பாசனம் அளித்த தூசி மாமண்டூர் ஏரி வறண்டது - வரத்து கால்வாய்களும் புதர்களால் தூர்ந்துபோன அவலம்


4 ஆயிரம் ஏக்கருக்கு பாசனம் அளித்த தூசி மாமண்டூர் ஏரி வறண்டது - வரத்து கால்வாய்களும் புதர்களால் தூர்ந்துபோன அவலம்
x
தினத்தந்தி 25 Jun 2019 3:45 AM IST (Updated: 25 Jun 2019 5:56 AM IST)
t-max-icont-min-icon

4 ஆயிரம் ஏக்கருக்கு பாசனம் அளித்த தூசிமாமண்டூர் ஏரி ஒரு சொட்டு கூட தண்ணீரின்றி வறண்டு விட்டது. இந்த ஏரிக்கு தண்ணீர் வரும் வரத்து கால்வாய்களும் புதர்கள் மண்டி காணப்படுகிறது.

செய்யாறு, 

திருவண்ணாமலை மாவட்டம் முழுக்க, முழுக்க விவசாயத்தை நம்பியே உள்ளது. இதற்காக பல ஆண்டுகளுக்கு முன்பே நமது முன்னோர்கள் ஏரி, குளங்களை உருவாக்கி கால்வாய்களையும் அமைத்திருந்தனர். அந்த வகையில் வெம்பாக்கம் தாலுகாவை சேர்ந்த தூசி, மாமண்டூர், நரசமங்கலம், வடகல்பாக்கம், பல்லாவரம், கனிகிலுப்பை, கீழ்நாயக்கன்பாளையம், மேனலூர், பூனைதாங்கல், ஏழாச்சேரி, சோதியம்பாக்கம், குரங்கு அணில்முட்டம், அழிஞ்சல்பட்டு உள்ளிட்ட 18 கிராமங்கள் மாமண்டூர் ஏரியிலிருந்து தண்ணீர் பெற்று வந்தன.

அந்த ஏரியால் மேற்கண்ட கிராமங்களை சேர்ந்த 4 ஆயிரத்து 118 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இந்த ஏரியானது கி.பி.600-ம் ஆண்டு மகேந்திர பல்லவன் ஆட்சி காலத்தில் உருவாக்க பட்டது என்றும், அப்போது இதற்கு ‘சேத்ராமிகா தடாகம்’ என்று பெயரிடப்பட்டதாகவும் கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது. ஏரியின் கிழக்கே தொடர்ச்சியாக உள்ள மலைகள் ஏரிக்கு தடுப்பு அரணாக உள்ளது.

இந்த ஏரிக்கு ராஜா கால்வாய் நீர்வரத்து கால்வாயாக திகழ்கிறது. இந்த கால்வாய் 14 கிலோ மீட்டர் நீளம் உடையது ஆகும். வடஇலும்பை கிராமத்தின் அருகே பாலாற்றின் படுகையிலிருந்து ஏரிக்கு நேரடியாக தண்ணீர் வந்தடைகிறது. ஆற்றின் முகப்பில் மதகு அமைக்கப்பட்டு வினாடிக்கு 720 கனஅடி தண்ணீர் வரும் வகையில் கால்வாய் வெட்டப்பட்டுள்ளது.

தூசி கால்வாய் ஆற்காட்டை அடுத்த புதுப்பாடி அருகே பாலாற்று படுகையில் தொடங்கி ராந்தம் ஏரி, தென்னம்பட்டு ஏரி, பெருங்கட்டூர், வெம்பாக்கம், கீழ்நெல்லி, அரிகரபாக்கம் வழியாக வந்து தூசிமாமண்டூர் ஏரியை அடைகிறது. இந்த கால்வாய் வினாடிக்கு 410 கனஅடி தண்ணீர் வரும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கால்வாய் 25 கிலோ மீட்டர் தூரம் நீளம் கொண்டு தொடர்ச்சியாக 54 ஏரிகளை நிரப்புகிறது. அதன்பின்னர் வரும் உபரிநீர் தூசிமாமண்டூர் ஏரிக்கு வரும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளது.

இதேபோல் மற்றொரு கால்வாயான தண்டரை கால்வாய், செய்யாறு ஆற்றுப் படுகையில் தொடங்கி சித்தாத்தூர் ஏரியை வந்தடைகிறது. அந்த கால்வாயில் வரும் தண்ணீரால் சித்தாத்தூர் ஏரி நிரம்பினால் உபரிநீர் தூசி மாமண்டூர் ஏரிக்கு செல்கிறது. அதிகபட்சமாக வினாடிக்கு 336 கனஅடி தண்ணீர் வரும் வகையிலும் 20 கிலோ மீட்டர் நீளத்திற்கு தண்டரை கால்வாய் வெட்டப்பட்டுள்ளது.

இந்த 3 கால்வாய்கள் மூலம் தூசிமாமண்டூர் ஏரிக்கு நீர்வரத்து ஏற்பட்டு ஏரி நிரம்புகிறது. ஏரியில் 30 அடி உயரத்திற்கு நீர் நிரம்புகிறது என அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர். ஏரி நிரம்பினால் 3 பருவத்திற்கும் 18 கிராம நிலத்திற்கு தேவையான தண்ணீர் கிடைத்து விவசாயம் நடக்கிறது.

ஆனால் மாமண்டூர் ஏரி நிரம்பி பல வருடங்கள் ஆகிறது என விவசாயிகள் வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர். தூசிமாமண்டூர் ஏரி நிரம்பினால் சுற்றியுள்ள விவசாயிகள் நிலத்தில் உள்ள கிணற்றில் தண்ணீர் ஊற்று அதிகரிக்கும். விவசாயமும் செழிக்கும்.மேலும் 3 நீர்வரத்து கால்வாய்கள் செடிகள் வளர்ந்து தூர்ந்து போனதால் நீர் வர சிரமமாக உள்ளது. எனவே 3 கால்வாய்கள் சீரமைக்கும்பணியை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்கத்தினர் அரசிற்கு கோரிக்கை வைக்கின்றனர்.

4 ஆயிரத்து 118 ஏக்கர் விவசாய நிலத்திற்கு நீர்பாசனம் செய்கின்ற நிலையில் கடந்த 10 தினங்களாக ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லாமல் வறண்டு விட்டது. தற்போது ஏரியின் நிலங்கள் வெடிப்பு, வெடிப்பாக விரிசலுடன் இருப்பதை பார்க்க முடிகிறது. இந்த ஏரியில் ஆங்காங்கே குடிசைகள் அமைத்து பொதுமக்கள் தங்களுடைய ஆடுகளையும், மாடுகளையும் மேய்ச்சலுக்கு விடுகின்றனர். இயற்கை கொடுத்த வரமான மழை நீரை வீணாக்காமல் தேக்கி வைக்க முன்னோர்கள் ஏற்படுத்திய இந்த ஏரியை சிலர் ஆக்கிரமித்துள்ளதும் வேதனை அளிக்கிறது. எனவே பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள தூசிமாமண்டூர் ஏரியை பராமரிக்க பொதுப்பணித் துறையினர் அலட்சியம் காட்டுவதாக விவசாயிகள் புகார் கூறுகின்றனர். எனவே விவசாயம் செழித்து நாடு வளம் பெறவும், விவசாயிகள் நலம் பெறவும் இந்த ஏரியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி பாசன கால்வாய்களை தூர்வாரி தண்ணீர் தேங்க அரசு துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Next Story