சேலம் அருகே, ஆசை வார்த்தை கூறி சிறுமி பலாத்காரம் - வாலிபர் உள்பட 3 பேர் மீது வழக்கு


சேலம் அருகே, ஆசை வார்த்தை கூறி சிறுமி பலாத்காரம் - வாலிபர் உள்பட 3 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 25 Jun 2019 3:45 AM IST (Updated: 25 Jun 2019 6:06 AM IST)
t-max-icont-min-icon

சேலம் அருகே ஆசை வார்த்தை கூறி சிறுமி பலாத்காரம் செய்த சம்பவம் தொடர்பாக வாலிபர் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சேலம், 

சேலம் அருகே வீராணம் தாதம்பட்டியை சேர்ந்த ஒருவரின் 17 வயதான மகள், சேலத்தில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வருகிறாள். இதற்காக அவள், தினமும் தாதம்பட்டியில் இருந்து டவுன் பஸ்சில் பழைய பஸ் நிலையத்திற்கு வந்து செல்வது வழக்கம். அதேபோல், பள்ளிப்பட்டி தைலானூரை சேர்ந்த மணிமாறன் (வயது 25) என்பவரும் தினமும் அந்த பஸ்சில் வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். இவர், ஆட்டோ மொபைல் கடையில் வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அந்த சிறுமியிடம் பேச்சு கொடுத்த மணிமாறன் அவளுடன் நெருங்கி பழக ஆரம்பித்தார். பின்னர், அவர் சிறுமியை காதலிப்பதாக கூறி பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. இதனால் சிறுமி கர்ப்பமானாள். இதையடுத்து அந்த சிறுமி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மணிமாறனிடம் கேட்டுள்ளாள். ஆனால் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, மணிமாறன், அதே பகுதியை சேர்ந்த வேறு ஒரு பெண்ணை கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இதுபற்றி அறிந்த சிறுமி, மணிமாறனின் வீட்டிற்கு சென்று முறையிட்டார். அப்போது, மணிமாறன், அவரது தாய் மதி, உறவினர் பிரபு ஆகியோர் சிறுமியை மிரட்டி அங்கிருந்து விரட்டினர்.

இது தொடர்பாக சிறுமி, அம்மாபேட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தாள். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய மணிமாறன், மிரட்டல் விடுத்த அவரது தாய் மதி, உறவினர் பிரபு ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். தற்போது தலைமறைவாக உள்ள அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story