நிலப்பிரச்சினை விவகாரம் தொடர்பாக, ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தீக்குளிக்க முயற்சி - சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு பரபரப்பு


நிலப்பிரச்சினை விவகாரம் தொடர்பாக, ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தீக்குளிக்க முயற்சி - சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு பரபரப்பு
x
தினத்தந்தி 25 Jun 2019 4:00 AM IST (Updated: 25 Jun 2019 6:06 AM IST)
t-max-icont-min-icon

நிலப்பிரச்சினை விவகாரம் தொடர்பாக சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தீக்குளிக்க முயற்சி செய்தனர்.

சேலம், 

சேலம் பனமரத்துப்பட்டி வெடிக்காரன்புதூர் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 36). விவசாயி. இவருடைய மனைவி தமிழ்செல்வி (30). இவர்களுடைய மகன் பொன்சங்கர் (13), மகள் சவுந்தர்யா (11). இந்த நிலையில் நேற்று பழனிசாமி தனது குடும்பத்தினருடன் மனு கொடுப்பதற்காக சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு வந்தார்.

பின்னர் பழனிசாமி திடீரென கேனில் இருந்த மண்எண்ணெயை தன் மீதும், குடும்பத்தினர் மீதும் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதைப்பார்த்து உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஓடி சென்று கேனை பிடுங்கினர். இதையடுத்து போலீசார் அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி ஆட்டோவில் டவுன் போலீஸ் நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர்.

இதைத்தொடர்ந்து பழனிசாமியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் போலீசாரிடம் கூறுகையில், எனக்கு வெடிக்காரன்புதூர் பகுதியில் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தையொட்டியுள்ள 3 பேர் சிறிது, சிறிதாக நிலத்தை அபகரித்து வருகிறார்கள். இதை தட்டிக்கேட்டபோது எனக்கு மிரட்டல் விடுகிறார்கள். இது தொடர்பாக நான் மல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தேன். அதன்பேரில் அவர்கள் விசாரணை நடத்தி, எதிர் தரப்பை சேர்ந்தவர்களை நிலத்தை அபகரிக்க கூடாது என தெரிவித்தனர்.

அதனால் விவசாய தோட்டத்தில் அவர்கள் செய்திருந்த ஆக்கிரமிப்பை சரிசெய்ய சென்றேன். ஆனால் அவர்கள் எந்தவிதமான வேலையும் செய்யவிடாமல் மிரட்டுகிறார்கள். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். இதைக்கேட்ட போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். கலெக்டர் அலுவலகம் முன்பு 4 பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story