ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு: ரெயில் மறியலில் ஈடுபட முயன்ற தமிழ்தேசிய கட்சியினர் 60 பேர் கைது


ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு: ரெயில் மறியலில் ஈடுபட முயன்ற தமிழ்தேசிய கட்சியினர் 60 பேர் கைது
x
தினத்தந்தி 25 Jun 2019 11:15 PM GMT (Updated: 25 Jun 2019 5:01 PM GMT)

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தஞ்சையில் ரெயில் மறியலில் ஈடுபட முயன்ற தமிழ்தேசிய கட்சியினர் 60 பேரை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர்,

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். மேலும் இந்த திட்டத்தை ரத்து செய்யக்கோரி போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள், பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்யக்கோரியும், தமிழக அரசு மத்திய அரசை வலியுறுத்தக்கோரியும். காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கக்கோரியும் தமிழ் தேசிய கட்சி சார்பில் தஞ்சையில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.


அதன்படி தமிழ்தேசிய கட்சி தலைவர் தமிழ்நேசன் தலைமையில் பொதுச்செயலாளர் முல்லைநாதன், மாநில இளைஞரணி செயலாளர் சந்திரபோஸ், மாவட்ட செயலாளர் சபாபதி ஆகியோர் முன்னிலையில் அக்கட்சியினர் தஞ்சை ரெயில் நிலையத்துக்குள் நுழைய முயன்றனர்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த தஞ்சை நகர துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட 3 பெண்கள் உள்பட 60 பேர் கைது செய்யப்பட்டனர்.

Next Story