நெல்லை மாநகராட்சியில் குறை தீர்க்கும் கூட்டம்: அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் ஆணையாளரிடம், பொதுமக்கள் மனு


நெல்லை மாநகராட்சியில் குறை தீர்க்கும் கூட்டம்: அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் ஆணையாளரிடம், பொதுமக்கள் மனு
x
தினத்தந்தி 26 Jun 2019 3:30 AM IST (Updated: 25 Jun 2019 10:37 PM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாநகராட்சியில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி ஆணையாளரிடம், பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

நெல்லை,

நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. ஆணையாளர் விஜயலட்சுமி தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று, நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மாநகர நல அலுவலர் சதீஸ்குமார் மற்றும் உதவி ஆணையாளர்கள், என்ஜினீயர்கள் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி மற்றும் த.மு.மு.க. நிர்வாகிகள் ஆணையாளரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில், மேலப்பாளையம் மண்டலத்தில் 29-வது வார்டுக்கு உட்பட்ட ரெட்டியார்பட்டி ரோடு கரீம் நகரில் 3 தெருக்கள் உள்ளன. ஒரு தெருவுக்கு 160 வீடுகள் வீதம் மொத்தம் 480-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த வீடுகளில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகிறார்கள். இங்குள்ள மக்கள் நெல்லை மாநகராட்சிக்கு தொடர்ந்து சொத்து வரி, குடிநீர் கட்டணம் உள்ளிட்டவற்றை செலுத்தி வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள வீடுகளின் பின்புறம் கழிவுநீர் செல்ல ஓடை இல்லை. ஓடை கட்டுவதற்கு 3 அடி இடம் விடப்பட்டுதான் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. கழிவுநீர் ஓடை இல்லாததால், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தெருக்களில் வழிந்தோடுகிறது. எனவே மாநகராட்சி நிர்வாகம் கழிவுநீர் ஓடை கட்டித்தர வேண்டும். 3 தெருக்களிலும் சாலை வசதி, மின்விளக்கு வசதி போன்ற அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

நெல்லை டவுன் பாபா தெரு மக்கள் கொடுத்த மனுவில், “எங்கள் பகுதியில் 16 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட சமுதாய நலக்கூடம் சேதம் அடைந்துள்ளது. அதில் மேற்கூரையை மட்டும் புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் கட்டிடம் முழுவதும் சேதம் அடைந்து இருப்பதால், கட்டிடத்தை முழுமையாக இடித்துவிட்டு புதிய சமுதாய நலக்கூடம் கட்டித்தர வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

பாளையங்கோட்டை பெருமாள்புரம் நேதாஜி தெரு மக்கள் நலவாழ்வு சங்கத்தினர் கொடுத்த மனுவில், “நேதாஜி தெரு விரிவாக்க பகுதியில் புதிய வீடுகள் கட்டி மக்கள் வசித்து வருகின்றனர். அந்த பகுதியில் இரவு நேரத்தில் மக்கள் அச்சமின்றி சென்று வர வசதியாக மின்விளக்குகள் அமைத்து தர வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.இதே போல் சர்தார்புரம் பகுதி மக்கள் பாதாள சாக்கடை பிரச்சினை தொடர்பாகவும், குலவணிகர்புரம் பகுதி மக்கள் மழைநீர் வடிகால், கழிவுநீர் ஓடை வசதி கேட்டும் மனுக்கள் கொடுத்தனர்.

Next Story