அம்பை தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவு நாளில் குவிந்த பொதுமக்கள்


அம்பை தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவு நாளில் குவிந்த பொதுமக்கள்
x
தினத்தந்தி 26 Jun 2019 3:30 AM IST (Updated: 25 Jun 2019 10:58 PM IST)
t-max-icont-min-icon

ஜமாபந்தி நிறைவு நாளான நேற்று அம்பை தாலுகா அலுவலகத்தில் மனுகொடுப்பதற்கு ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.

அம்பை,

அம்பை தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி கடந்த 19-ந் தேதி தொடங்கியது. இதில் பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டு தகுதியான மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. ஒரு வாரமாக நடைபெற்ற ஜமாபந்தி நேற்று நிறைவு பெற்றது. நேற்று அம்பை குறுவட்டத்தை சேர்ந்த கீழ அம்பை, மேல அம்பை, விக்கிரமசிங்கபுரம்-1, 2, சாட்டுபத்து, ஊர்க்காடு உள்ளிட்ட 14 கிராமங்களின் கணக்குகள் சரிபார்க்கப்பட்டது. மேலும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பட்டா மாறுதல், ஓய்வூதியம், முதியோர் உதவித்தொகை, விதவை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்குக்கான ஓய்வூதியம் என மனுக்கள் வழங்க ஏராளமான பொதுமக்கள் அம்பை தாலுகா அலுவலகத்தில் திரண்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ஜமாபந்தியில் மனு கொடுத்தவர்களிடம் இருந்து, பரிசீலனை செய்யப்பட்டு, 10 மாற்றுத்திறனாளிகள், ஒரு இளம் விதவை, ஒரு முதியவர் ஆகியோர்களுக்கு மாதம் ரூ.1000 பெறுவதற்கான ஓய்வூதிய ஆணையை மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் சுகி பிரேம்லா வழங்கினார். இதில் தாசில்தார்கள் வெங்கடேஷ், பிரபாகர், அருண்செல்வம் துணை தாசில்தார் ரவீந்திரன், வருவாய் அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story