இலவச மடிக்கணினி கேட்டு நெல்லை கலெக்டர் அலுவலகத்தை மாணவிகள் முற்றுகை


இலவச மடிக்கணினி கேட்டு நெல்லை  கலெக்டர்  அலுவலகத்தை மாணவிகள் முற்றுகை
x
தினத்தந்தி 25 Jun 2019 11:00 PM GMT (Updated: 25 Jun 2019 5:52 PM GMT)

இலவச மடிக்கணினி கேட்டு நெல்லை கலெக்டர் அலுவலகத்தை மாணவிகள் நேற்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை,

நெல்லை டவுன் கல்லணை மாநகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கடந்த ஆண்டு பிளஸ்-2 முடித்த மாணவிகள் ஏராளமானோர் நேற்று நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மாணவிகள், கலெக்டர் ஷில்பாவை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் கூறிஇருப்பதாவது:- தமிழக அரசின் இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்தின் கீழ் 2017-18-ம் ஆண்டு படித்த மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டது. ஆனால் கடந்த 2018-19-ம் ஆண்டில் படித்த மாணவிகளுக்கு இதுவரை மடிக்கணினி வழங்கப்படவில்லை. இந்த நிலையில் தற்போது பிளஸ்-2 படித்துக்கொண்டிருக்கும் மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது. இதனால் எங்களுக்கு மடிக்கணினி கிடைக்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே முதலில் எங்களுக்கு மடிக்கணினி வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

நாங்குநேரி அருகே உள்ள ஸ்ரீவரமங்கைபுரத்தை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறிஇருப்பதாவது:-

நெல்லை-கன்னியாகுமரி நாற்கர சாலையில் நாங்குநேரி சுங்கச்சாவடி அருகில் எங்கள் ஊர் அமைந்துள்ளது. இங்கு 38 வீடுகள் உள்ளன. 100-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். எங்கள் ஊருக்கு பல ஆண்டுகளுக்கு பிறகு தற்போதுதான் நல்ல சாலை வசதி செய்யப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் சுங்கச்சாவடிக்கு கட்டணம் செலுத்தாமல் பயணம் செய்ய விரும்பும் லாரிகள், சுங்கச்சாவடி வழியாக செல்லாமல் எங்கள் கிராமம் வழியாக செல்கின்றது. தற்போது வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் புதிய ரோடு சேதம் அடைந்து மீண்டும் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது.

இதுதவிர டிரைவர்கள் ஊருக்கு அருகில் வாகனத்தை நிறுத்திக்கொண்டு ஆடு, கோழிகளை திருடிச்செல்கின்றனர். மேலும் மதுகுடித்து விட்டு ஆடு, மாடுகள் மீது வாகனத்தை மோதி விட்டு நிற்காமல் சென்று விடுகின்றனர். எனவே நாற்கரசாலையில் செல்லும் வாகனங்கள் எங்கள் ஊர் வழியாக செல்வதை தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இதே போல் திருக்குறுங்குடி நம்பி தோப்பு ஊர் பொது மக்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், “எங்கள் ஊரில் ஒரு பெண் வீட்டில் நகை திருட்டு போய் விட்டது. இது தொடர்பாக போலீசார் விசாரணை என்ற பெயரில், ஊரில் உள்ள பட்டதாரிகள், வாலிபர்கள் மற்றும் முதியோர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று அடித்து, உதைத்து வருகிறார்கள். எனவே நகை திருட்டு சம்பவத்தில் தொடர்புடையவர்களை மட்டுமே போலீசார் விசாரித்து பிடிக்க வேண்டும். பொதுமக்களை துன்புறுத்தக்கூடாது” என்று கூறப்பட்டு உள்ளது.

Next Story