குடிநீர் தேவை குறித்து தூத்துக்குடி மாநகராட்சி அதிகாரிகளுடன் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ. ஆலோசனை


குடிநீர் தேவை குறித்து தூத்துக்குடி மாநகராட்சி அதிகாரிகளுடன் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ. ஆலோசனை
x
தினத்தந்தி 25 Jun 2019 10:00 PM GMT (Updated: 25 Jun 2019 6:35 PM GMT)

தூத்துக்குடி மாநகராட்சி பொதுமக்களின் குடிநீர் தேவைகள் குறித்த மாநகராட்சி அதிகாரிகளுடனான ஆலோசனைக்கூட்டம் தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது.

தூத்துக்குடி,

கூட்டத்துக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாநகராட்சி ஆணையாளர் வி.பி.ஜெயசீலன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் தூத்துக்குடி மாநகராட்சி 4 மண்டல உதவி ஆணையாளர்கள் குடிநீர் வினியோக ஆய்வாளர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இந்த ஆய்வு கூட்டத்தில் மாநகர பகுதிகளில் சீரான குடிநீர் வினியோகம் பணி, நிறைவடையாமல் உள்ள சாலை பணிகளை மேற்கொள்ளுதல், பக்கிள் ஓடையில் தேங்கி உள்ள நீர் மற்றும் அமலைகளை சுத்தம் செய்தல், பாதாள சாக்கடை திட்ட பணிகளை விரைவு படுத்துதல் மற்றும் தூத்துக்குடி மாநகர மக்களின் அத்தியாவசிய பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

பின்னர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

தூத்துக்குடி மாநகராட்சியின் வளர்ச்சி மற்றும் குடிநீர் பிரச்சினை குறித்து விரிவாக கலந்து ஆலோசித்தோம். பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து நிறைவேற்றவும், ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் விரைந்து செயல்படுத்த வேண்டும், சிதம்பரநகரில் உள்ள மார்க்கெட்டை நவீனப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளோம். மாநகராட்சி பள்ளிக்கூடங்கள் நவீனப்படுத்த வேண்டும். பக்கிள் ஓடையை சுத்தம் செய்வதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Next Story