அடுத்தடுத்து 8 இடங்களில் கைவரிசை பெண்களிடம் சங்கிலி பறித்த மோட்டார் சைக்கிள் கொள்ளையன் கைது
சென்னையில் அடுத்தடுத்து 8 இடங்களில் தனியாக சென்ற பெண்களிடம் சங்கிலி பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட மோட்டார் சைக்கிள் கொள்ளையன் கைது செய்யப்பட்டார்.
அடையாறு
சென்னை ஐஸ்அவுஸ், ராயப்பேட்டை, மயிலாப்பூர், கோட்டூர்புரம், ஆதம்பாக்கம் உள்பட 8 இடங்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள் பெண்களிடம் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டனர்,
இதில் கோட்டூர்புரத்தில் செல்வி என்பவரிடமும், ராயப்பேட்டையில் ஜெயலட்சுமியிடம் நடந்த சங்கிலி பறிப்பு முயற்சியில் இருவரும் சுதாரித்துக்கொண்டு நகையை கெட்டியாக பிடித்து கொண்டதால் நகை தப்பியது.
பெரும்பாலான இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு போலீசாரால் கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில், அடுத்தடுத்து நடந்த இந்த துணிகர சங்கிலி பறிப்பு சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.
புகைப்படம் வெளியீடு
இதையடுத்து, சங்கிலிபறிப்பில் ஈடுபட்ட கொள்ளையர்களை பிடிக்க மயிலாப்பூர் துணை கமிஷனர் மயில்வாகனன் உத்தரவின்பேரில் கோட்டூர்புரம் உதவி கமிஷனர் சுதர்சன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், ஏட்டு சரவணகுமார், காவலர் பார்த்திபன் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் சம்பவம் நடந்த இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.
இதில் அடுத்தடுத்து நடந்தேறிய இந்த குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டது 2 பேர் என்பதை கண்டுபிடித்த போலீசார், கண்காணிப்பு கேமராவில் பதிவான அவர்களின் புகைப்படத்தையும் நேற்று முன்தினம் வெளியிட்டனர்.
கொள்ளையன் பிடிபட்டார்
மேலும் கொள்ளையர்களை விடிய விடிய தேடி வந்தனர். இந்த தேடுதல்வேட்டையில் அடையாறு இந்திரா நகர் ரெயில் நிலையம் அருகே பதுங்கி இருந்த கொள்ளையன் ஒருவரை நேற்று அதிகாலை தனிப்படையினர் மடக்கிப்பிடித்தனர். உடனே அவரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பிடிபட்டவர் சென்னை மூலக்கடையைச் சேர்ந்த ராகேஷ் (வயது 19) என்பதும், மோட்டார் சைக்கிளை இவரது கூட்டாளி அண்டா சீனு என்பவர் ஓட்ட இவர் பின்னால் அமர்ந்து கொண்டு பெண்களிடம் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.
மேலும் இருவரும் மது மற்றும் கஞ்சா போதையில் இந்த செயலில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இவர் மீது ஏற்கனவே திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் ஒரு கொலை வழக்கும், பெரியமேடு மற்றும் சிந்தாதிரிப்பேட்டை போலீஸ் நிலையங்களில் சங்கிலி பறிப்பு வழக்குகளும் நிலுவையில் உள்ளன.
கைது
மேலும் இந்த சங்கிலி பறிப்புக்கு அவர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள், திருட்டு வாகனம் என்பது விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து இவர்கள் இதுபோன்று வேறு ஏதும் குற்றச்செயல்களில் ஈடுபட்டனரா? என்பது குறித்து விசாரணை நடத்திய போலீசார், ராகேஷிடம் இருந்து ஒரு மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து, ராகேஷை கைது செய்த போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் நகைகளுடன் தலைமறைவான அவரது கூட்டாளி அண்டா சீனுவை வலைவீசி தேடி வருகின்றனர்.
36 மணி நேரத்தில் கைது
இதுகுறித்து மயிலாப்பூர் துணை கமிஷனர் மயில்வாகனன் கூறுகையில், ‘சம்பவம் நடந்த பகுதிகளில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளின் மூலம் குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு, சம்பவம் நடந்த 36 மணி நேரத்திற்குள் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையில் குற்றச்செயலில் ஈடுபடுபவர்கள் எந்தவிதத்திலும் தப்ப முடியாது என்பதற்கு இந்த சம்பவம் ஒரு சிறந்த உதாரணம்.
குற்றங்களை கட்டுப்படுத்த பழைய குற்றவாளிகளின் நடவடிக்கைகள் கூர்ந்து கண்காணிக்கப்படுகிறது. மயிலாப்பூர் காவல் மாவட்டத்தில் 5 ஆயிரம் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன. இந்த சம்பவத்தில் குற்றவாளிகளை அடையாளம் காண கண்காணிப்பு கேமரா பதிவுகள் மிகவும் உதவியாக இருந்தது’ என்று தெரிவித்தார்.
மோட்டார் சைக்கிள் கொள்ளையரை கைது செய்த தனிப்படை போலீசாரை துணை கமிஷனர் மயில்வாகனன் மற்றும் கூடுதல் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் ஆகியோர் நேரில் அழைத்து பாராட்டினர்.
Related Tags :
Next Story