கரூர் கலெக்டருக்கு மிரட்டல் விடுத்த வழக்கு: ஜோதிமணி எம்.பி.-செந்தில்பாலாஜி எம்.எல்.ஏ.வுக்கு முன்ஜாமீன்


கரூர் கலெக்டருக்கு மிரட்டல் விடுத்த வழக்கு: ஜோதிமணி எம்.பி.-செந்தில்பாலாஜி எம்.எல்.ஏ.வுக்கு முன்ஜாமீன்
x
தினத்தந்தி 26 Jun 2019 4:45 AM IST (Updated: 26 Jun 2019 12:59 AM IST)
t-max-icont-min-icon

கரூர் கலெக்டருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது தொடர்பான வழக்கில் கரூர் கோர்ட்டில் ஜோதிமணி எம்.பி. மற்றும் செந்தில்பாலாஜி எம்.எல்.ஏ. ஆகியோர் ஆஜராகி முன்ஜாமீன் பெற்றனர்.

கரூர்,

கரூர் நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்று ஜோதிமணி எம்.பி.யாகவும், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்று செந்தில்பாலாஜி எம்.எல்.ஏ.வாகவும் ஆனார்கள். இதற்கிடையே கரூர் நாடாளுமன்ற தேர்தலில் இறுதிக்கட்ட பிரசார அனுமதியை பெறுவதில் அ.தி.மு.க., தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியினர் இடையே கடும் போட்டி நிலவியது. ஏப்ரல் மாதம் 15-ந் தேதி அன்று மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான அன்பழகன் தாந்தோன்றிமலையில் உள்ள தனது முகாம் (வீடு) அலுவலகத்தில் இருந்தார்.

அப்போது அங்கு வந்த தி.மு.க.வினர் சிலர் தனது வீட்டுக்கதவை தட்டி உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விதமாக நடந்து கொண்டதாகவும், மேலும் போனில் தொடர்பு கொண்டு தனக்கு மிரட்டல் விடுத்ததாகவும் தாந்தோன்றிமலை போலீஸ் நிலையத்தில் கலெக்டர் அன்பழகன் புகார் கொடுத்தார். மேலும் இந்த சம்பவத்துக்கெல்லாம் தூண்டுதலாக தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் செந்தில்பாலாஜி, காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி ஆகியோர் இருந்ததாக அவர் தெரிவித்து இருந்தார். அதன்பேரில் ஜோதிமணி, செந்தில்பாலாஜி, வழக்கறிஞர் செந்தில் உள்ளிட்டோர் மீது தாந்தோன்றிமலை போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதுதொடர்பான வழக்கு கரூர் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் எண்-1 கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் ஜோதிமணி எம்.பி., செந்தில்பாலாஜி எம்.எல்.ஏ. ஆகியோர் மனுதாக்கல் செய்தனர். அதன் அடிப்படையில் அவர்களுக்கு முன்ஜாமீன் வழங்க உத்தரவிடப்பட்டது.

இதைத்தொடர்ந்து நேற்று காலை கரூர் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் எண்-1 கோர்ட்டில் நீதிபதி விஜய்கார்த்தி முன்பு ஜோதிமணி எம்.பி., செந்தில்பாலாஜி எம்.எல்.ஏ. ஆஜராகினர். அப்போது அவர்களுக்கு, போலீஸ் நிலையத்தில் கையெழுத்திடுவது உள்ளிட்ட நிபந்தனையுடன் கூடிய முன்ஜாமீன் வழங்கப்பட்டது.

இதேபோல், லிங்கமநாயக்கன்பட்டியில் தேர்தல் பிரசாரத்தின் போது கருங்கல்பட்டியை சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகி திருமூர்த்தி மற்றும் அவரது நண்பர் தாக்கப்பட்டது தொடர்பாக அரவக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு சம்பந்தமாக ஜூடிசியல் மாஜிஸ்திரேட் எண்-1 கோர்ட்டில் செந்தில்பாலாஜி ஆஜராகி முன்ஜாமீன் பெற்றார்.

இதைத்தொடர்ந்து நிருபர் களிடம் செந்தில்பாலாஜி எம்.எல்.ஏ. கூறுகையில், நாடாளுமன்ற தேர்தலின் போது எங்களது தோழமை கட்சி வேட்பாளர் ஜோதிமணி சார்பில் நியமிக்கப்பட்ட முகவர்கள் கருத்துக்களை மாவட்ட தேர்தல் அதிகாரி பொறுப்பில் இருந்த கலெக்டரிடம் எடுத்து சொல்வதற்கு முற்பட்டனர். ஆனால் நேரம் ஒதுக்கப்படவில்லை. இதனால் கலெக்டர் இல்லத்தில் சந்திக்க சென்றனர். அப்போது எங்களது தூண்டுதலின்பேரில் அந்த நபர்கள் மிரட்டியதாக பொய் புகாரை கலெக்டர் கொடுத்திருந்தார். அந்த வழக்கில் தான் தற்போது கோர்ட்டில் ஆஜரானோம். 100-க்கும் மேற்பட்டவர்கள் தனது இல்லத்திற்கு வந்து மிரட்டல் விடுத்ததாக கலெக்டர் குற்றம் சாட்டியிருந்தார். அது குறித்த வீடியோ பதிவை வெளியிடுவதாக கூறினார். ஆனால் தற்போது வரை அந்த வீடியோ பதிவை கலெக்டர் வெளியிடவில்லை. எனவே அவர் அந்த வீடியோவை வெளியிட வேண்டும். ஆளுங்கட்சியின் தூண்டுதலின்பேரில் அவர் செயல்பட்டது தெரிகிறது, என்றார்.

Next Story