பெங்களூருவில் பரபரப்பு போலீஸ்காரரை கத்தியால் குத்திய ரவுடி மீது துப்பாக்கிச்சூடு


பெங்களூருவில் பரபரப்பு போலீஸ்காரரை கத்தியால் குத்திய ரவுடி மீது துப்பாக்கிச்சூடு
x
தினத்தந்தி 25 Jun 2019 9:30 PM GMT (Updated: 2019-06-26T00:59:42+05:30)

பெங்களூருவில் போலீஸ் காரரை கத்தியால் குத்திய ரவுடியை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். இது பெங்களூரு நகரில் கடந்த 3 நாட்களில் நடந்த 3-வது துப்பாக்கிச்சூடு சம்பவம் ஆகும்.

பெங்களூரு,

பெங்களூரு பாகலூரில் வசித்து வருபவர் அசோக் (வயது 22). இவர் கடந்த
2016-ம் ஆண்டு போலீஸ்காரர் ஒருவரை தாக்கிய வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்து வெளியே வந்த பின்னரும் அசோக் சில குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தார். இவருடைய பெயர் கே.ஜி.ஹள்ளி போலீஸ் நிலையத்தில் ரவுடி பட்டியலிலும் இடம் பெற்றுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு லிங்கராஜபுரத்தில் உள்ள மேஹர் அலி என்பவருடைய வீட்டிற்குள் அசோக் நுழைந்தார். பின்னர் அவர், மேஹர் அலியை சரமாரியாக தாக்கி அவரிடமிருந்து பணம், செல்போனை கொள்ளையடித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து பானசவாடி போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவில் கஸ்தூரி நகர் 3-வது கிராசில் அசோக் பதுங்கி இருப்பதாக பானசவாடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் விருபாக்சசாமி தலைமையிலான போலீசார் அவரை பிடிக்க சென்றனர். போலீசாரை பார்த்தவுடன் அசோக் மோட்டார் சைக்கிளில் தப்பிக்க முயன்றார். போலீசார் அவரை காரில் விரட்டி சென்றனர். ஒரு திருப்பத்தில் சென்றபோது மோட்டார் சைக்கிளில் இருந்து அசோக் தவறி விழுந்தார். இதையடுத்து போலீஸ்காரர் சுதாகர் அவரை பிடிக்க சென்றார். அப்போது ஆத்திரமடைந்த அசோக், போலீஸ்காரர் சுதாகரை கத்தியால் குத்திவிட்டு ஓட்டம் பிடித்தார்.

இதனால் இன்ஸ்பெக்டர் விருபாக்சசாமி வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு எச்சரிக்கை விடுத்தார். ஆனால் அசோக் சரண் அடையாமல் தொடர்ந்து ஓடியதோடு, பிடிக்க சென்ற போலீசாரை தாக்க முயன்றார். இதனால் பாதுகாப்பு கருதி இன்ஸ்பெக்டர் விருபாக்சசாமி, அசோக்கை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதில் அவருடைய காலில் குண்டு பாய்ந்தது. இதனால் அவர் சுருண்டு விழுந்தார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் குண்டு காயம் அடைந்த அசோக், கத்திக்குத்து காயமடைந்த போலீஸ்காரர் சுதாகர் ஆகியோரை சிகிச்சைக்காக போலீசார் பவுரிங் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

ஏற்கனவே ரவுடி பப்பு மற்றும் ராகுல் ஆகியோரை பெங்களூரு மாநகர போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த நிலையில் தற்போது ரவுடி அசோக்கை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ளனர். இது கடந்த 3 நாட்களில் மட்டும் பெங்களூரு நகரில் நடந்த 3-வது துப்பாக்கிச்சூடு சம்பவம் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story