அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
முறையாக சம்பளம் வழங்கக்கோரி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் சார்பில் உடுமலை, மடத்துக்குளத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
உடுமலை,
பணித்தளத்தில் குடிநீர், முதலுதவிப்பெட்டி, நிழற்கூறை ஆகியவற்றிற்கு ஏற்பாடு செய்யவேண்டும். முதியோர் ஓய்வூதியம் பெறுவோருக்கு வேலை இல்லை என்று மறுக்கக்கூடாது. ஆண்டுக்கு 200 நாட்கள் வேலை வழங்க வேண்டும். தினக்கூலியை ரூ.400 ஆக உயர்த்தித் தர வேண்டும். 100 நாள் வேலைக்கு வரும் தொழிலாளர்களுக்கு விபத்து ஏற்பட்டால் விபத்து நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க உடுமலை ஒன்றிய கமிட்டி சார்பில், உடுமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் உடுமலை ஒன்றிய தலைவர் ஆர்.மாசாணி தலைமை தாங்கினார். செயலாளர் எம்.ரங்கராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் கி.கனகராஜ், சங்க ஒன்றிய கமிட்டி உறுப்பினர்கள் முத்துசாமி, சுப்புலட்சுமி, சுந்தரம் மற்றும் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் திரளாக கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தைத்தொடர்ந்து, கோரிக்கை மனுவை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அதிகாரியிடம் கொடுத்தனர்.
இதுபோல் மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு தாலுகா செயலாளர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். மேலும் பன்னீர்செல்வம், பழனிச்சாமி, தெண்டபாணி உள்பட நிர்வாகிகள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர். பின்னர் கோரிக்கை மனுவை ஊராட்சி ஒன்றிய அலுவலக மேலாளரிடம் வழங்கினார்கள்.
Related Tags :
Next Story