பூங்கா ரெயில் நிலையத்தில் கஞ்சா வைத்திருந்த 2 வாலிபர்கள் போலீசை கண்டதும் கூவத்தில் குதித்தனர்


பூங்கா ரெயில் நிலையத்தில் கஞ்சா வைத்திருந்த 2 வாலிபர்கள் போலீசை கண்டதும் கூவத்தில் குதித்தனர்
x
தினத்தந்தி 26 Jun 2019 4:15 AM IST (Updated: 26 Jun 2019 1:27 AM IST)
t-max-icont-min-icon

பூங்கா ரெயில் நிலையத்தில் கஞ்சா பொட்டலம் வைத்திருந்த 2 வாலிபர்கள் போலீசை கண்டதும் ஓட்டம் பிடித்து கூவத்தில் குதித்தனர்.

சென்னை,

சென்னை பூங்கா ரெயில் நிலையத்தில் நேற்று மாலை பாதுகாப்பு பணியில் ரெயில்வே போலீஸ்காரர் பிரதீப் ஈடுபட்டு இருந்தார். அப்போது ரெயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.

அந்த நேரத்தில் பயணிகளுக்கு மத்தியில் சந்தேகத்துக்கிடமாக 2 பேர் வெகுநேரம் உட்கார்ந்து இருந்தனர். இதை பார்த்த போலீஸ்காரர் பிரதீப், அவர்களை பிடித்து விசாரிக்க அருகில் சென்றார். உடனே அந்த 2 பேரும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.

போலீஸ்காரர் பிரதீப்பும், அந்த 2 பேரை துரத்தியபடி ஓடினார். இதை பார்த்த ரெயில் நிலையத்தில் இருந்த சக பயணிகளும் அவருக்கு உதவி செய்தனர்.

கூவத்தில் குதித்தனர்

ஒரு கட்டத்தில் பூங்கா ரெயில் நிலையத்துக்கு அருகில் இருந்த கூவம் ஆற்றில் குதித்து தப்பிக்க முயற்சித்தனர். ஆனால் அங்கு சகதியாக இருந்ததால் அதில் அவர்கள் 2 பேரும் மாட்டிக்கொண்டனர். போலீஸ்காரர் பிரதீப்பும் கூவம் ஆற்றில் இறங்கி, அந்த 2 பேரையும் இழுத்து வந்தார்.

பின்னர், அவர்களிடம் சோதனை செய்த போது கஞ்சா பொட்டலம் இருந்தது. இதையடுத்து அந்த 2 பேரையும், எழும்பூர் ரெயில்வே போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தார்.

போலீசார் விசாரணை

போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில், இருவரும் பல்லாவரத்தை சேர்ந்தவர்கள் என்பதும், கஞ்சா பொட்டலம் வைத்திருந்ததால், போலீசை பார்த்ததும் ஓட்டம் பிடித்ததாகவும் தெரிவித்தனர். போலீசாரிடம் பிடிபட்டவர்களில் ஒருவர் பெயர் ராஜூ என்று தெரிய வந்தது.

தொடர்ந்து போலீசார் அவர்களிடம், கஞ்சா பொட்டலம் விற்பனையில் ஈடுபட்டார்களா? அல்லது அவர்களுடைய பின்னணியில் யாரெல்லாம் இருக்கிறார்கள்? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்கு பிறகு, அவர்கள் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

Next Story