கச்சிராயப்பாளையம் அருகே நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றம் - அதிகாரிகள் நடவடிக்கை
கச்சிராயப்பாளையம் அருகே நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றினர்.
கச்சிராயப்பாளையம்,
கச்சிராயப்பாளையம் அருகே கல்வராயன்மலை அடிவாரத்தில் கோமுகி அணை உள்ளது. கல்வராயன்மலையில் பெய்யும் மழைநீர் கல்படை, மல்லிகைபாடி, சித்தாறு ஆகிய ஆறுகளின் வழியாக கோமுகி அணைக்கு வரும். இந்த அணையின் மூலம் 11 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.
இந்த நிலையில் மல்லிகைபாடி எல்லையில் இருந்து சித்தார் வரை உள்ள சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கும், 30 அடி அகலத்துக்கும் நீரோடைகளை அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் சிலர் ஆக்கிரமித்து வாழை, தென்னை மற்றும் தானிய வகை பயிர்களை சாகுபடி செய்திருந்தனர். இதனால் மல்லிகைபாடியில் இருந்து சித்தாருக்கு தண்ணீர் செல்வது தடைபட்டது.
இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த விவசாயி மணி என்பவர், சித்தாரில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து சித்தாரில் நீரோடை ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் உத்தரவின் பேரில், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் பிரபு, வருவாய்த்துறையினர் ஆகியோர் பொக்லைன் எந்திரத்துடன் சென்று நீரோடைகளை ஆக்கிரமித்து பயிர் செய்திருந்த வாழை, தென்னை மற்றும் தானிய வகை பயிர்களை அகற்றினர். அப்போது கச்சிராயப்பாளையம் இன்ஸ்பெக்டர் வள்ளி, சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் ஆகியோர் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
Related Tags :
Next Story