மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை உருவாக்க நடவடிக்கை; முதல்-அமைச்சர் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு


மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை உருவாக்க நடவடிக்கை; முதல்-அமைச்சர் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு
x
தினத்தந்தி 26 Jun 2019 4:45 AM IST (Updated: 26 Jun 2019 1:48 AM IST)
t-max-icont-min-icon

மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை உருவாக்க நடவடிக்கை எடுக்க நாராயணசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

புதுச்சேரி,

குடிநீர் பிரச்சினை தொடர்பான ஆலோசனை கூட்டம் தலைமை செயலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கினார்.

அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடிகிருஷ்ணாராவ், கமலக்கண்ணன், தலைமை செயலாளர் அஸ்வனிகுமார், கலெக்டர் அருண், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் மகாலிங்கம், சுற்றுச்சூழல் துறை இயக்குனர் ஸ்மிதா, வனத்துறை இயக்குனர் குமார் உள்பட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் நிலத்தடி நீரை மேம்படுத்துவது, தடையின்றி குடிநீர் வினியோகம் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. கூட்டம் முடிந்ததும் அமைச்சர் நமச்சிவாயம் நிருபர்களிடம் கூறியதாவது:-

புதுவை மாநிலத்தில் தண்ணீர் பிரச்சினை தொடர்பாக முதல்-அமைச்சர் தலைமையில் ஆலோசித்துள்ளோம். மாநில மக்களுக்கு நல்ல தரமான குடிநீர் தருவது என்று முடிவு எடுத்துள்ளோம். எங்கு குடிநீர் பிரச்சனை உள்ளதோ அங்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலைமையில் குடிநீர் பிரச்சினையை போக்கிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விரைவில் நாம் பருவமழையை சந்திக்க உள்ளோம். அப்போது நீரை சேமிப்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது. ஏரி, குளங்களை தூர்வார நடவடிக்கை எடுக்கவும் கூறியுள்ளோம். ஏற்கனவே தூர்வாருவதற்காக ஒதுக்கப்பட்ட பணத்தினை கொண்டு ஏரி, குளங்களை தூர்வாரும் பணியினை இந்த மாத இறுதிக்குள் முடிக்க கூறியுள்ளோம்.

அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் நிதியை திரட்டி உடனடியாக மழைநீரை சேகரிக்கவும், மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை உருவாக்கவும், நீர்நிலைகளை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இதற்காக உயர்மட்ட குழுவினை கலெக்டர் தலைமையில் அமைக்க கூறி உள்ளோம். தண்ணீரின்றி பயிர்கள் பாதிக்கப்பட்டிருந்தால் அதுகுறித்து கணக்கெடுக்குமாறும் அறிவுறுத்தி உள்ளோம்.

தமிழகத்தைப்போல் புதுச்சேரியில் குடிநீர் பஞ்சம் இல்லை. சில இடங்களில் தண்ணீர் பற்றாக்குறை இருப்பதாக பொதுமக்களிடம் இருந்து புகார் வந்துள்ளது. குறிப்பாக பி.எஸ்.பாளையம், நெட்டப்பாக்கம், ரெயின்போ நகர், சாமிப்பிள்ளைத்தோட்டம் பகுதிகளில் இருந்து புகார் வந்துள்ளது. அவற்றை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக கருவடிக்குப்பம், வில்லியனூர் பகுதியில் போர்வெல் போடப்பட்டுள்ளது.

கடல்நீரை குடிநீராக்கும் திட்டமும் உள்ளது. ஏரி, குளங்களை தூர்வார 16.72 கோடி ஒதுக்கப்பட்டது. இந்த நிதியை கொண்டு 20 ஏரி, 32 குளங்களை தூர்வார அடையாளம் காணப்பட்டது. அதில் 16 ஏரிகளும், 4குளங்களும் தூர்வாரப்பட்டுள்ளது. மீதி உள்ளவை தூர்வாரப்பட உள்ளது. இதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. ஊசுடு ஏரியையும் தூர்வார திட்டமிட்டுள்ளது. இதற்காக வனத்துறையிடம் ஆலோசனை கேட்டுள்ளோம். காரைக்கால் பகுதியில் ஏரி, குளங்களில் உள்ள வண்டல்மண்ணை விவசாயிகள் எடுத்து வருகின்றனர். அதேபோல் புதுச்சேரியிலும் வருவாய்த்துறையின் அனுமதி பெற்று விவசாயிகள் எடுத்துக்கொள்ளலாம். நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த கோனேரிகுப்பத்தில் படுகை அணை கட்டவும் திட்டம் உள்ளது.

புதுவை மாநிலத்தில் மணல் தட்டுப்பாட்டை போக்கிட காரைக்கால் துறைமுகத்தில் 53 ஆயிரம் டன் மணல் இறக்கு மதி செய்யப்பட்டுள்ளது. அந்த மணல் விரைவில் விற்பனைக்கு வரும். மழைநீர் சேகரிப்பு அமைப்பினை ஒவ்வொரு வீடுகளிலும் உருவாக்கிட வேண்டும். அதை நகரமைப்பு குழுமத்தின் அனுமதி பெறும்போதே பொதுமக்களிடம் அறிவுறுத்துகிறோம்.

புதுவை நகரப்பகுதிக்கு ஊசுடு ஏரியிலிருந்து ரூ.49.50 கோடி செலவில் குடிநீர் வழங்க திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிராக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து ஒருவர் தடை பெற்றுள்ளார். அந்த தடையை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் 20 திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது. அந்த திட்டத்தின்படிதான் நகராட்சி கட்டிடம் கட்டி முடியும் நிலையில் உள்ளது. இதே திட்டத்தில் குடிசை வீடுகளை மாற்றி குடியிருப்புகளை கட்டித்தர இடம் பார்த்து வருகிறோம்.

இவ்வாறு அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.

Next Story