மின்துறைக்கு வாங்கப்பட்ட ஸ்மார்ட் மீட்டர் குறித்து எம்.எல்.ஏ.க்கள் சரமாரி கேள்வி
மின்துறைக்கு வாங்கப்பட்ட ஸ்மார்ட் மீட்டர்கள் தொடர்பாக பொது கணக்கு குழுவில் எம்.எல்.ஏ.க்கள் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
புதுச்சேரி,
புதுவை சட்டமன்ற பொதுக்கணக்கு குழு கூட்டம் நேற்று நடந்தது. குழுவின் தலைவர் சிவா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், அனந்தராமன், அசனா, தீப்பாய்ந்தான், விஜயவேணி, பாஸ்கர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அப்போது மின்துறையில் ஸ்மார்ட் மீட்டர் வாங்கியது தொடர்பாக எம்.எல்.ஏ.க்கள் சரமாரியாக கேள்வி எழுப்பினார்கள். குறிப்பாக இந்த மின் மீட்டர் வாங்கியதற்கு விடப்பட்ட டெண்டர் தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டனர். ஆனால் அதற்கு சரியான பதில் அளிக்கப்படவில்லை. இதனால் எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தி தெரிவித்தனர்.
கேள்விகளுக்கு அடுத்த கூட்டத்தின்போது சரியான பதில் அளிக்காவிட்டால் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட பரிந்துரை செய்யப்படும் என்று கூறினார்கள்.
ஸ்மார்ட் மீட்டர் கொள்முதல் செய்ததில் முறைகேடு நடந்துள்ளதாக கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரின்போது எம்.எல்.ஏ.க்கள் கடுமையாக குற்றஞ்சாட்டி இருந்தனர். தற்போது பொதுகணக்கு குழுவிலும் இந்த பிரச்சினை எழுப்பப்பட்டுள்ளது. இதனால் இந்த பிரச்சினை அதிகாரிகள் மட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.