புரோட்டா மாஸ்டரிடம் பணம் பறித்து திருநங்கை அட்டகாசம்; பஸ்நிலைய பகுதியில் அரைநிர்வாணமாக ரகளை– பரபரப்பு


புரோட்டா மாஸ்டரிடம் பணம் பறித்து திருநங்கை அட்டகாசம்; பஸ்நிலைய பகுதியில் அரைநிர்வாணமாக ரகளை– பரபரப்பு
x
தினத்தந்தி 25 Jun 2019 10:15 PM GMT (Updated: 25 Jun 2019 8:18 PM GMT)

புரோட்டா மாஸ்டரிடம் பணம் பறித்து விட்டு அரை நிர்வாணமாக திருநங்கை ஒருவர் அட்டகாசத்தில் ஈடுபட்ட சம்பவம் புதுவை பஸ் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

புதுச்சேரி,

புதுவைக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அவ்வாறு சுற்றுலா வருபவர்கள், உள்ளூர் மக்களிடம் திருநங்கைகள் பிச்சை கேட்டு தொல்லை கொடுப்பதாகவும், பணம் பறிப்பில் ஈடுபடுவதாகவும் போலீசுக்கு புகார்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் பஸ் நிலையத்துக்கு வந்த ஒரு பயணியிடம் பணத்தை பறித்துக்கொண்டு திருநங்கை ஒருவர் அட்டகாசத்தில் ஈடுபட்டார். இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்த விவரம் வருமாறு:–

விழுப்புரம் மாவட்டம் சித்தலம்பட்டை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 39). அரியாங்குப்பத்தில் ஒரு ஓட்டலில் புரோட்டா மாஸ்டராக உள்ளார். நேற்று மதியம் வேலை முடிந்து புதிய பஸ்நிலையம் அருகே அய்யனார் கோவில் தெருவில் உள்ள கடைக்கு சென்றுவிட்டு வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு திருநங்கை பணம் கேட்ட போது தர மறுத்தார்.

ஆனால் அந்த திருநங்கை திடீரென்று மணிகண்டனின் சட்டைப்பைக்குள் கையைவிட்டு ரூ.400–ஐ பறித்துக் கொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த மணிகண்டன் அந்த பணத்தை கேட்டார். ஆனால் திருநங்கை தர மறுக்கவே அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அங்கிருந்த சிலர் பணத்தை தருமாறு திருநங்கையிடம் வற்புறுத்தினர்.

அந்த திருநங்கை பணத்தை பறிக்கவில்லை என சாதித்தார். இதனால் ஏற்பட்ட பரபரப்பை தொடர்ந்து பஸ்நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அங்கு வந்து விசாரித்தனர். அங்கிருந்த ஆட்டோ டிரைவர்களும் பணத்தை கொடுத்துவிடுமாறு கூறினார்கள். ஆனால் தொடர்ந்து அந்த திருநங்கை பணத்தை பறிக்கவில்லை என கூறினார்.

இந்தநிலையில் தன் மீது குற்றம் சாட்டியதால் தற்கொலை செய்யப்போவதாக கூறி தனியார் பஸ்சின் குறுக்கே பாய்ந்து ரோட்டில் படுத்து உருண்டார். தனது சேலையை அவிழ்த்து போட்டு அரை நிர்வாணமாக போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த சம்பவம் அங்கிருந்த பயணிகள் மற்றும் பொதுமக்களை முகம் சுளிக்க வைத்தது.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த ஆட்டோ டிரைவர்களும், பொதுமக்களும் அந்த திருநங்கையை பிடித்து முறையாக கவனித்தனர். அப்போது அவரது ஜாக்கெட்டிற்குள் இருந்து புரோட்டா மாஸ்டரிடம் பறித்த பணம் கீழே விழுந்தது. அதை மீட்டதுடன் திருநங்கையை போலீசில் ஒப்படைத்தனர்.

போலீஸ் விசாரணையில் அந்த திருநங்கை அரியாங்குப்பத்தை சேர்ந்த லாவண்யா என்ற யோகராஜ் என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை உருளையன்பேட்டை போலீசார் கைது செய்தனர்.


Next Story