தேர்தல் பிரசாரத்தில் கூறியது போல் உயர்த்தப்பட்ட வரிகளை குறைக்க வேண்டும்; மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்


தேர்தல் பிரசாரத்தில் கூறியது போல் உயர்த்தப்பட்ட வரிகளை குறைக்க வேண்டும்; மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 26 Jun 2019 4:00 AM IST (Updated: 26 Jun 2019 1:48 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் கூறியதுபோல் உயர்த்தப்பட்ட வரிகளை காங்கிரஸ் அரசு குறைக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தி உள்ளது.

புதுச்சேரி,

புதுவை மாநில மக்கள் நீதி மய்ய செயற்குழு கூட்டம் மாநில தலைவர் டாக்டர் எம்.ஏ.எஸ்.சுப்ரமணியன் தலைமையில் நடந்தது. பொதுச்செயலாளர் எ.மு. ராஜன், இணை பொதுச்செயலாளர் முருகேசன், பொருளாளர் தாமோ.தமிழரசன், செயலாளர்கள் அரிகிருஷ்ணன், நிர்மலா சுந்தரமூர்த்தி, ராம.அய்யப்பன், சந்திரமோகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

புதுச்சேரி மக்கள் நிதி மய்யத்தை வளர்க்கும் நோக்கிலும், மக்களுக்கான சேவைகளை செய்யும் நோக்கிலும் தொகுதிகள் தோறும் நியமிக்கப்பட்டுள்ள தன்னார்வலர்களுக்கு அங்கீகாரம் அளிப்பது. வருகிற 29-ந்தேதி அவர்களுக்கான கூட்டம் நடத்துவது.

நாடாளுமன்ற தேர்தல் காரணமாக தடைபட்டிருந்த உறுப்பினர் சேர்க்கையை மீண்டும் தீவிரப்படுத்துவது.

ஜிப்மரில் புதுவை மாணவர்களுக்குரிய எம்.பி.பி.எஸ். இடங்கள் வெளிமாநிலத்தவர்களால் பறிக்கப்படுவது தடுக்கப்பட வேண்டும். ஜிப்மர் நிர்வாகம் 55 இடங்களையும் புதுச்சேரி மாணவர்களுக்கே கிடைப்பதை உறுதி செய்யவேண்டும். தனியார் நிறுவன வேலைவாய்ப்பில் உள்ளூர் இளைஞர்களுக்கு 60 சதவீத இடஒதுக்கீட்டை தரவேண்டும். ஜிப்மரிலும் 60 சதவீத இடஒதுக்கீடு கிடைக்க வழிகாண வேண்டும்.

புதுவையில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் வரை மாதம் ஒருமுறை கிராமசபை கூட்டத்தை கூட்டி மக்களின் பிரச்சினைகளை அறிந்து தீர்வுகாண வேண்டும்.

புதுவை அரசு வீட்டுவரி, குடிநீர் வரி, மின்சார வரிகளை உயர்த்தியதுடன் புதிதாக குப்பைக்கும் வரியை விதித்துள்ளனர். ஆனால் நாடாளுமன்ற தேர்தலின்போது வரிகளை நாங்கள் உயர்த்தவில்லை, கவர்னர்தான் உயர்த்தினார் என்றும் காங்கிரஸ் வெற்றிபெற்றால் வரிகள் குறைக்கப்படும் என்றும் கூறினர். தேர்தல் முடிந்து ஒரு மாதம் ஆகியும் இதுவரை வரிகளை குறைக்கவில்லை. உடனடியாக அனைத்து வரிகளையும் குறைக்கவேண்டும்.

மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Next Story