தமிழகத்தில் மக்களை ஏமாற்றி வெற்றி பெற்று விட்டனர் - எச்.ராஜா பேச்சு
தமிழகத்தில் மக்களை ஏமாற்றி தி.மு.க.வினர் வெற்றி பெற்று விட்டனர் என்று எச்.ராஜா கூறினார்.
இளையான்குடி,
இளையான்குடி தாலுகா குணப்பனேந்தல் கிராமத்தில் பா.ஜனதா பொதுக்கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய தலைவர் ராஜபிரதீப் தலைமையில் நடைபெற்றது. இதில் பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா கலந்து கொண்டு தேர்தலில் பா.ஜனதாவிற்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவித்தார். அப்போது அவர் பேசியதாவது:– சிவகங்கை நாடாளுமன்ற தொகுதில் வெற்றி பெறாவிட்டாலும் தமிழ்நாட்டுக்கு பிரதமர் மோடியின் மூலம் நல்லது செய்வேன்.
ஆனால் தீயசக்திகளின் கையில் நாடு செல்லாமல் காப்பாற்றி மோடியின் கையில் நாடு ஒப்படைக்கப்பட்டதால், தி.மு.க., காங்கிரஸ் கொடுத்த வாக்குறுதிகள் அவர்களால் நிறைவேற்ற முடியாது. அவர்களின் கூட்டணி பொய்களை பரப்பி மக்களை ஏமாற்றி தமிழகத்தில் வெற்றி பெற்று விட்டனர். இனி அவர்களின் பொய் பிரசாரம் எடுபடாது. இந்தி எதிர்ப்பு என கூறும் தி.மு.க.வினர் தான் அவர்கள் நடத்தி வரும் 45 பள்ளிகளில் இந்தியை கற்றுக்கொடுத்து, தமிழில் பேசினால் அபராதம் போடுகின்றனர்.
இதை மக்களிடம் நிரூபிப்பேன். இளையான்குடியில் எனக்கு தேர்தல் பணி செய்ததால் எங்களது கட்சிக்காரர் பூச்சியனேந்தல் கிராமத்தை சேர்ந்த விமல் என்பவர் மீது போலீசார் பொய் வழக்கு போட்டுள்ளதை கண்டித்து போராட்டம் நடத்துவேன். பிரதமர் மோடியின் படத்தை சர்ச்சுக்கு முன் வைக்க எதிர்ப்பு தெரிவித்து கொலை மிரட்டல் விடுத்தவர் மீது போலீசார் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இந்து என்றால் இளக்காரமாக இனி நடத்தக் கூடாது.
தமிழகத்தின் எதிர்ப்பான திட்டம் எல்லாம் தி.மு.க.வால் வந்தது என்பதை மக்கள் தெரியும் காலம் வரும். அப்போது அந்த கட்சி காணாமல் போகும். அதேபோல வெற்றி பெற்ற பலர் விரைவில் சிறைசெல்லும் காலம் மிக அருகில் உள்ளது. இவ்வாறு அவர் பேசினார். இதில் மாவட்ட தலைவர் சொக்கலிங்கம், துணை தலைவர் சிதம்பரம், செயலாளர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட இளைஞர் அணி துணை தலைவர் ராஜ்குமார் நன்றி கூறினார்.