5–வது கட்ட அகழாய்வு பணி: கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட பழங்கால ‘இரட்டைச்சுவர்’


5–வது கட்ட அகழாய்வு பணி: கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட பழங்கால ‘இரட்டைச்சுவர்’
x
தினத்தந்தி 26 Jun 2019 5:00 AM IST (Updated: 26 Jun 2019 2:15 AM IST)
t-max-icont-min-icon

5–வது கட்ட அகழாய்வு பணி நடந்துவரும் நிலையில் கீழடியில் தற்போது பழங்கால இரட்டைச்சுவர் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதனை அந்த பகுதி மக்கள் ஆர்வத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.

திருப்புவனம்,

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் யூனியனில் கீழடி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மத்திய தொல்லியல் துறை சார்பில் பண்டைய தமிழர்களின் நாகரிகத்தை அறியும் வகையில் அகழாய்வு பணிகள் நடைபெற்றன. அங்கு கடந்த 2015–ம் ஆண்டு முதற்கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் தொடங்கின. இதில் பானை ஓடுகள், யானை தந்தத்தினால் ஆன தாயக்கட்டைகள் உள்பட மொத்தம் 4 ஆயிரத்து 125 பொருட்கள் கிடைத்தன.

பின்னர் கடந்த 2016–ம் ஆண்டு ஜனவரி மாதம் 2–வது கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கின. இதில் செங்கல் சுவர்கள், மருத்துவ குடுவைகள், ஈட்டி, கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் என 1,899 பொருட்கள் கிடைத்தன. அதன் பின்னர் கடந்த 2017–ம் ஆண்டு நடந்த 3–வது கட்ட அகழ்வாராய்ச்சியின் போது ஆபரணங்கள் உள்பட 1,800 பொருட்கள் கிடைத்தன. தொடர்ந்து கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 4–வது கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் தமிழக தொல்லியல்துறை சார்பில் நடைபெற்றன. இதில் செப்பு நாணயங்கள், எட்டு அடுக்கு உறை கிணறுகள், கத்தி, கண்ணாடி மணிகள், அணிகலன்கள் என 5 ஆயிரத்து 820 பொருட்கள் கிடைத்தன.

தற்போது 5–வது கட்ட அகழாய்வு பணிகள் கீழடியில் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்த பணிக்காக விவசாயி கருப்பையா இடத்தில் 4 குழிகள் தோண்டப்பட்டு வருகிறது. அப்போது பழங்காலத்து ‘இரட்டை சுவர்கள்’ கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. அதில் ஒரு சுவர் சற்று அகலமாகவும், மற்றொரு சுவர் சிறியதாகவும் இருந்தன.

தற்போது இந்த சுவர்கள் 1 அடி உயரம் மட்டும் வெளியே தெரிகிறது. இன்னும் அந்த பகுதியில் 20 அடி ஆழத்தில் குழிகள் தோண்டப்பட உள்ளன. அப்போதுதான் இந்த சுவர் எவ்வளவு உயரம் வரை உள்ளது என்ற விவரம் தெரிய வரும். இந்த சுவரில் உள்ள செங்கல் ஒவ்வொன்றும் 6 முதல் 8 கிலோ எடை கொண்டதாக உள்ளன. தற்போது பயன்படுத்தும் செங்கல் 3 முதல் 4 கிலோ வரை தான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த இரட்டைச்சுவர் வடிவமைப்பை பார்க்கும் போது, அரண்மனையின் சுவராக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த இரட்டை சுவரை அந்த பகுதியை சேர்ந்த மக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.


Next Story