நயினார்கோவில் அருகே குழாய் உடைப்பால் சாலையில் வீணாக ஓடும் காவிரி குடிநீர்; அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் அதிருப்தி


நயினார்கோவில் அருகே குழாய் உடைப்பால் சாலையில் வீணாக ஓடும் காவிரி குடிநீர்; அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் அதிருப்தி
x
தினத்தந்தி 26 Jun 2019 4:15 AM IST (Updated: 26 Jun 2019 2:23 AM IST)
t-max-icont-min-icon

நயினார்கோவில் அருகே குழாய் உடைப்பால் காவிரி குடிநீர் சாலையில் வீணாக பெருக்கெடுத்து ஓடுகிறது.

நயினார்கோவில்,

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி தாலுகா, நயினார்கோவில் யூனியனுக்கு உட்பட்ட பகுதிகளில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் தள்ளுவண்டிகளில் காலி குடங்களை எடுத்துக்கொண்டு தண்ணீரை தேடி நீண்ட தூரம் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, இப்பகுதியில் வசிக்கும் ஆண்களும், பெண்களும் தண்ணீர் சேகரிப்பதிலேயே தங்களது நேரம் முழுவதையும் செலவிடுகின்றனர். இதுதவிர ஆடு, மாடு போன்ற கால்நடைகளும் தண்ணீர் கிடைக்காமல் தவிப்புக்குள்ளாகி வருகின்றன. கிராமங்களில் உள்ள குடிநீர் குழாய்கள் அனைத்தும் காட்சிப்பொருளாக உள்ளன.

இந்த நிலையில் நயினார்கோவில் யூனியனுக்கு உட்பட்ட கொளுவூர் முதல் கொடிக்குளம் கிராமம் வரையிலும் சாலையோரத்தில் 8 இடங்களில் காவிரி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருகிறது. இதனால் கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்வது தடைபட்டுள்ளது. இவ்வாறு குழாய் உடைப்பில் இருந்து வெளியேறும் தண்ணீர் சாலையில் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடுகிறது. ஒருபுறம் குடிநீரை தேடி மக்கள் காலி குடங்களுடன் அலையும் நிலையில், மறுபுறம் குடிநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடி வீணாகி வருவது மன வேதனையடையச் செய்கிறது.

இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் குழாய் உடைப்பை சரி செய்ய எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக உள்ளனர். பொதுமக்கள் தண்ணீருக்காக அல்லல்படும் இச்சூழ்நிலையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் போதிலும் அதிகாரிகளின் ஒத்துழைப்பு இல்லாததால் குடிநீர் தட்டுப்பாடு தலை விரித்தாடுகிறது.

எனவே தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் குடிநீர் குழாய்களில் ஏற்பட்டுள்ள உடைப்புகளை சரி செய்ய போர்க்கால நடவடிக்கை எடுப்பதுடன், பொதுமக்களின் புகார்களுக்கு அலட்சியம் காட்டும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தி உள்ளனர்.

Next Story