உப்புக்கோட்டையில், சேதமடைந்த வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடம்


உப்புக்கோட்டையில், சேதமடைந்த வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடம்
x
தினத்தந்தி 25 Jun 2019 10:30 PM GMT (Updated: 2019-06-26T03:03:50+05:30)

உப்புக்கோட்டையில் உள்ள வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடம் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது.

உப்புக்கோட்டை,

போடிநாயக்கனூர் ஒன்றியம் உப்புக்கோட்டையில் தமிழக அரசின் வேளாண்மை விரிவாக்க மையம் அமைந்துள்ளது. சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்ட இந்த மையத்தின் மூலம் உப்புக்கோட்டை, டொம்புச்சேரி, பெருமாள் கவுண்டன் பட்டி, பத்ரகாளிபுரம், காமராஜபுரம், சடையால்பட்டி, போடேந்திரபுரம், குண்டல் நாயக்கன் பட்டி, பாலார் பட்டி, கூழையனூர் உள்பட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் பயனடைந்து வந்தனர்.

வேளாண்மை விரிவாக்க மையத்தின் மூலம் தரமான நிலக்கடலை, உளுந்து, பாசிப்பயறு, தட்டைபயிறு போன்ற விதை வகைகள் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்பட்டு வந்தது. இது தவிர விவசாயிகளுக்கு அத்தியாவசியமான பூச்சிமருந்து தெளிக்கும், கருவி நெல் அறுவடை செய்யும் எந்திரம் போன்ற நவீன கருவிகளும் மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த வேளாண்மை விரிவாக்க மையம் கடந்த 2 ஆண்டுகளாக சரியாக இயங்கவில்லை. ஒரு உதவி அலுவலர் மாதத்திற்கு ஒரு முறை பெயரளவிற்கு மட்டுமே வந்து சென்றார். பின்னர் அவரும் வரவில்லை.

தற்போது வேளாண்மை விரிவாக்கமையம் செயல்படாமல் மிகவும் சேதம் அடைந்து கட்டிடத்தின் மேற்கூரையில் மரச்செடிகள் வளர்ந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. வேளாண்மை விரிவாக்க மையத்தை சுற்றி ஊராட்சி அலுவலகம், கிராமநிர்வாக அலுவலகம், அஞ்சல் அலுவலகம் ஆகிய அலுவலகங்கள் அமைந்துள்ளது. இங்கு நாள்தோறும் பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில் சிறுவர்கள் சேதமடைந்த வேளாண்மை விரிவாக்க கட்டிடத்தின் மீது ஏறி விளையாடி வருகின்றனர். இதனிடையே கட்டிடம் எந்த நேரத்தில் இடிந்து விழுமோ என்று தெரியாத நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டிடத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Next Story