கோவிலையொட்டி அரசு ஆஸ்பத்திரி கட்ட எதிர்ப்பு, கிராம மக்களுடன் சாந்திராமு எம்.எல்.ஏ. நடத்திய பேச்சுவார்த்தையில் சுமுக தீர்வு
கோத்தகிரி அருகே கோவிலையொட்டி அரசு ஆஸ்பத்திரி கட்ட கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுதொடர்பாக சாந்திராமு எம்.எல்.ஏ. நடத்திய பேச்சுவார்த்தையில் சுமுக தீர்வு எட்டப்பட்டது.
கோத்தகிரி,
கோத்தகிரி அருகே ஜக்கனாரை ஊராட்சிக்குட்பட்ட பெட்டட்டி, நடுஹட்டி, சேலவை உள்ளிட்ட கிராம பகுதிகளில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமங்களுக்கு சொந்தமான முனீஸ்வரன் கோவில் பெட்டட்டி பகுதியில் உள்ளது. இந்த கோவிலையொட்டி சமுதாய நலக்கூடம், ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவை உள்ளது. மேலும் அரவேனு பகுதியில் இருந்து சுற்றுவட்டார கிராமங்களுக்கு செல்ல மிகவும் குறுகிய சாலை மட்டுமே உள்ளது.
இந்நிலையில் அரவேனு பகுதியில் 5 படுக்கைகளுடன் கூடிய அரசு ஆஸ்பத்திரி கட்ட முடிவு செய்யப்பட்டதை தொடர்ந்து, கடந்த சில வாரங்களுக்கு முன்பு மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, அரசு ஆஸ்பத்திரி அமைய உள்ள அரசுக்கு சொந்தமான நிலங்களை ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து அரவேனு பெட்டட்டி பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை இடித்து அகற்றி அந்த இடத்தை விரிவாக்கம் செய்து ஆஸ்பத்திரி கட்ட முடிவு செய்ததாக கூறப்படுகிறது.
இந்த இடத்தில் அரசு ஆஸ்பத்திரி கட்டப்பட்டால் குறுகிய பாதையில் அவசர தேவைகளுக்கு ஆம்புலன்ஸ் சென்று வர சிரமம் ஏற்படுவதுடன், கோவில் வார பூஜை மற்றும் பண்டிகை காலங்களில் ஒலிபெருக்கிகள் பயன்படுத்தும்போது ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெரும் நோயாளிகளுக்கு சிரமம் ஏற்படும் எனவும், மேலும் இந்த கோவிலுக்கு முன்புறம் உள்ள பகுதியில் இப்பகுதி மக்களில் யாரேனும் இறந்தால் அவர்களது இறுதி சடங்குகள் வழக்கமாக அந்த பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வருவதால் அதற்கும் இடையூறு ஏற்படும்.
மேலும் அரவேனுவில் இருந்து பெட்டட்டிக்கு செல்லும் சாலையில் உள்ள சுத்துக்கல் பகுதியில் சுற்று வட்டார கிராமங்களுக்கு பொதுவான ஜெடயலிங்கா சுவாமி கோவில் அமைந்துள்ளதால் பண்டிகை சமயங்களில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கூடும் இடமாக இருப்பதால் அந்த வழியாக நோயாளிகளை சிகிச்சைக்கு கொண்டு செல்வதில் சிரமம் ஏற்படும் என்பதால் அப்பகுதி மக்கள் அரசு ஆஸ்பத்திரி கட்ட கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து மாற்று இடத்தில் ஆஸ்பத்திரி கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்தனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் பெட்டட்டி ஆரம்ப சுகாதார நிலையம் அருகே போலீஸ் பாதுகாப்புடன் ஆஸ்பத்திரி கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதனால் இந்த கிராம மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட முடிவு செய்தனர். இதனை தொடர்ந்து நேற்று காலை பெட்டட்டி சுற்று வட்டார கிராம மக்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு 1000 வீடு கவுண்டிகை (தலைவர்) ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். முன்னாள் கவுண்டிகை ஜோகீ கவுடர், ஊர்த்தலைவர் ராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில் பெட்டட்டி பகுதியில் அரசு ஆஸ்பத்திரி கட்டப்பட்டால் ஏற்படும் சிரமங்கள் குறித்தும், மாற்று இடத்தை அதிகாரிகளுக்கு காண்பித்து கொடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் சாந்திராமு எம்.எல்.ஏ. கலந்து கொண்டு கிராம மக்களிடம் சுமூக பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது அவர் கூறுகையில், அரவேனு பகுதியில் அரசு ஆஸ்பத்திரி வருவது வரவேற்கத்தக்கதாகும். அதற்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். எனினும் தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள இடம் அதற்கு ஏற்றதாக இல்லாததால் அரசு ஆஸ்பத்திரி கட்டுவதற்கான மாற்று இடத்தை வாங்கி கொடுக்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம். எனவே கிராம மக்கள் நலன்கருதி எனது சொந்த பணத்திலிருந்து ரூ.15 லட்சம் நிலம் வாங்குவதற்கு அளிக்க உள்ளேன். மாற்று இடத்தை அதிகாரிகளுக்கு காண்பித்த பிறகு அந்த இடத்தில் அரசு ஆஸ்பத்திரி கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
இதனையடுத்து அரவேனு தும்பூரை சேர்ந்த குமார் என்பவர், பெரியார்நகர் பகுதியில் உள்ள தனக்கு சொந்தமான நிலத்தை ஆஸ்பத்திரி கட்டுவதற்காக குறைந்த விலையில் வழங்குவதாக கூறினார். இதனால் இந்த பிரச்சனைக்கு சுமுக தீர்வு எட்டப்பட்டது. அனைத்து கிராம நிர்வாகிகள் பிரச்சினைக்கு தீர்வு காண உதவிய சாந்திராமு எம்.எல்.ஏ.வுக்கு நன்றி தெரிவித்தனர்.
கூட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர்கள் வேல்முருகன், ரமேஷ், கிராம நிர்வாக அலுவலர் சத்யா மற்றும் சுற்று வட்டார கிராமமக்களை ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story