அடுக்குமாடி குடியிருப்பில், வீடுகள் ஒதுக்கி தரக்கோரி பொதுமக்கள் தர்ணா - பிள்ளையார்குப்பத்தில் பரபரப்பு
குடிசை மாற்று வாரியத்தின் மூலம் கட்டப்போகும் அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கி தரக்கோரி பொதுமக்கள் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர்,
வேலூரை அடுத்த பிள்ளையார்குப்பம் பழத்தோட்ட பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் அங்குள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள கிணற்றின் மூலம் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகின்றனர். அங்குள்ள இடத்தில் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் நிலம் அளவீடு செய்யப்பட்டு கொடிக்கம்பங்கள் நடப்பட்டுள்ளன.
இந்த நிலையில் நேற்று அப்பகுதி மக்கள் திரண்டு தர்ணாவில் ஈடுபட்டனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-
நாங்கள் இந்த கிணற்றை பல ஆண்டுகளாக குடிநீருக்காக பயன்படுத்தி வருகிறோம். இங்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவ்வாறு கட்டினால் எங்கள் பகுதிக்கு குடிநீர் கிடைக்காமல் போக வாய்ப்பு உள்ளது. எங்கள் பகுதியில் உள்ளவர்கள் பலர் வீடுகள் இல்லாமல் உள்ளனர். கட்டப்போகும் குடியிருப்பில் எங்கள் பகுதியை சேர்ந்த வீடு இல்லாதவர்களுக்கு வீடுகள் ஒதுக்கி தர வேண்டும். மேலும் குடிநீர் தேவைக்காக மாற்று ஏற்பாடும் செய்து தரவேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
தர்ணா போராட்டம் குறித்து தகவல் அறிந்த சத்துவாச்சாரி போலீசார் அங்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத்தொடர்ந்து தகவல் அறிந்து வந்த வேலூர் தாசில்தார் ரமேஷ் மற்றும் அதிகாரிகள் பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். உங்களது கோரிக்கையை மனுவாக எழுதி கொடுங்கள், மாவட்ட கலெக்டரிடம் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் மனு கொடுத்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த சம்பவம் அந்தபகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story