வானவில் : காற்றிலிருந்து குடி நீர்


வானவில் :  காற்றிலிருந்து குடி நீர்
x
தினத்தந்தி 26 Jun 2019 4:25 PM IST (Updated: 26 Jun 2019 4:25 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தின் தலைநகர் சென்னை மட்டுமல்ல நாட்டின் பல பகுதிகளும் கடும் வறட்சியின் பிடியில் சிக்கித் தவிக்கிறது. இந்த நிலையில் குடிநீருக்கு மக்கள் அல்லாடும் நிலை அன்றாட நிகழ்வாகி வருகிறது.

தொழில்நுட்ப உலகில் குடிநீர் தேவைக்கும் தீர்வு கண்டுள்ளது ‘ஏர் ஓ ஏர்’ நிறுவனம். காற்றில் கலந்துள்ள ஈரப்பதத்தை குடிநீராக மாற்றித்தரும் இயந்திரத்தை இந்நிறுவனம் உருவாக்கிஉள்ளது.

இதனால் காற்றில் உள்ள ஈரப்பதத்தின் மூலம் நாளொன்றுக்கு 25 லிட்டர் குடிநீரை சுத்தமாக பெறலாம். காற்றில் ஈரப்பதம் 50 சதவீத அளவுக்கு இருந்தாலே இந்த கருவியிலிருந்து குடிநீரைப் பெறலாம். வெப்பம் அதிகரித்து ஈரப்பதம் குறைந்தாலும் இந்த கருவி சிறப்பாக செயல்படும். ஏ.சி. அறையிலும் இது செயல்படும்.

அதேசமயம் கடுமையான வெப்பம் தகிக்கும் பகுதியிலும் இது சிறப்பாக செயலாற்றும். இதில் பல அடுக்கு சுத்திகரிப்பு தொழில்நுட்பம் புகுத்தப்பட்டுள்ளது. இதில் ஓசோனைசேஷன் எனும் தொழில்நுட்பம் உள்ளது. இது உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை அழித்துவிடும்.

இதில் மூன்று மாடல்கள் அறிமுகமாகிஉள்ளன. டூபாயின்ட் (ரூ.40,000), டூபாயின்ட் பிரைம் (ரூ.50,000) மற்றும் டூபாயின்ட் சூப்பர் (ரூ.2,00,000) என்ற விலையில் வந்துள்ளன.

இதில் வீட்டு உபயோகத்துக்கு டூபாயின்ட் இயந்திரமே போதுமானது. இதில் நான்கு அடுக்கு வடிகட்டி வசதி உள்ளது. இந்த சாதனத்துக்கு ஓராண்டு உத்தரவாதமும் அளிக்கப்படுகிறது. தண்ணீர் தட்டுப்பாட்டால் தவிக்கும் தமிழ கத்துக்கு இதுபோன்ற தொழில்நுட்ப வரவுகள் மிகுந்த வரவேற்பைப் பெறும் என நம்பலாம்.

Next Story