குமரி மாவட்டத்தில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஜோதி ஓட்டம்–பேரணி


குமரி மாவட்டத்தில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஜோதி ஓட்டம்–பேரணி
x
தினத்தந்தி 26 Jun 2019 10:45 PM GMT (Updated: 26 Jun 2019 4:42 PM GMT)

குமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஜோதி ஓட்டம் மற்றும் பேரணி நடந்தது.

நாகர்கோவில்,

உலக போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி குமரி மாவட்ட போதை பொருள் நுண்ணறிவு பிரிவு சார்பில் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தின் முன் விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணியை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பேரணியில் பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த பேரணி விளையாட்டு அரங்கத்தில் தொடங்கி கோர்ட்டு ரோட்டில் உள்ள எஸ்.எல்.பி. அரசு பள்ளி முன் முடிவடைந்தது. இதில் நாகர்கோவில் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஜவகர், கூடுதல் போலீஸ் துணை சூப்பிரண்டு விஜய பாஸ்கர், வடசேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பெர்னார்டு சேவியர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் நாகர்கோவிலில் ரோஜாவனம் பாராமெடிக்கல் கல்லூரி சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் நடைபெற்றது. பேரணியை நாகர்கோவில் உதவி கலெக்டர் விஷ்ணு சந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் கல்லூரி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றனர்.

பேரணியானது கலெக்டர் அலுவலகம் முன் தொடங்கி கோர்ட்டு ரோட்டில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகம் வரை நடைபெற்றது. பேரணியில் விழிப்புணர்வு அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி கல்லூரி மாணவர்கள் கோ‌ஷமிட்டனர்.

இதேபோல் குமரி மாவட்ட போதை நோய் நலப்பணிகளின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் 14 இடங்களில் இருந்து நேற்று காலை 6 மணிக்கு போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஜோதி ஓட்டம் தொடங்கியது. அதாவது கன்னியாகுமரி, தென்தாமரைகுளம், பள்ளம், ராஜாக்கமங்கலம்துறை, முட்டம், குளச்சல், ஆலஞ்சி, குறும்பனை, இனயம், சுங்கான்கடை, கார்மல்நகர், எட்டாமடை, மறவன்குடியிருப்பு மற்றும் ஆரல்வாய்மொழி என 14 இடங்களில் இருந்து ஜோதி ஓட்டம் தொடங்கப்பட்டது. இதில் சமூக ஆர்வலர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த 14 இடங்களில் இருந்து தொடங்கிய விழிப்புணர்வு ஜோதி ஓட்டம் நாகர்கோவில் குருசடியில் உள்ள திருச்சிலுவை கல்லூரியில் நிறைவடைந்தது. அங்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் ஜோதியை பெற்றுக்கொண்டார்.

பின்னர் கல்லூரி கலையரங்கத்தில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் முதன்மை மாவட்ட நீதிபதி கருப்பையா, மாவட்ட நீதிபதி புகழேந்தி, கோட்டார் மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை, முதன்மை கல்வி அதிகாரி செந்திவேல் முருகன், அரசு வக்கீல் ஞானசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் பிரான்ஸ் சேவியர் நெல்சன் மற்றும் கல்லூரி நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Next Story