வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்ய முயன்றதால் - வாலிபரை கவுரவக்கொலை செய்த அண்ணன் போலீசில் சரண்


வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்ய முயன்றதால் - வாலிபரை கவுரவக்கொலை செய்த அண்ணன் போலீசில் சரண்
x
தினத்தந்தி 27 Jun 2019 4:45 AM IST (Updated: 27 Jun 2019 12:03 AM IST)
t-max-icont-min-icon

வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்ய முயன்றதால் வாலிபரை கவுரவக்கொலை செய்த அண்ணன் போலீசில் சரண் அடைந்தார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

மேட்டுப்பாளையம்,

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சீரங்கராயன் ஓடைகுப்பம் பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 45), தொழிலாளி. இவருடைய மனைவி பூவாத்தாள். இவர்களுடைய மகன்கள் வினோத் (25), கனகராஜ் (22), கார்த்திக் (19). இவர்கள் 3 பேரும் பாரம் தூக்கும் தொழிலாளர்கள். கனகராஜ், வெள்ளிப்பாளையம் ரோட்டில் உள்ள ஒரு இளம்பெண்ணை கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தார். அந்த பெண் வேறு சமூகத்தை சேர்ந்தவர் ஆவார்.

இவர்களுடைய காதல் விவகாரம் இருவீட்டாருக்கும் தெரியவந்ததால் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கனகராஜை திருமணம் செய்து கொள்வதற்காக அந்த இளம்பெண் வீட்டைவிட்டு வெளியேறி கனகராஜின் வீட்டுக்கு வந்தார். இதற்கு கனகராஜின் சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவர் திரும்பி சென்றார்.

இந்தநிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு அந்த இளம்பெண் மீண்டும் காதலன் வீட்டுக்கு வந்தார். இதனால் கனகராஜின் குடும்பத்தில் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து கருப்பசாமி, தன்னுடைய மகன் கனகராஜிடம், இளம்பெண்ணுடன் வாடகைக்கு வீடு பார்த்து குடியேறுமாறும், பிரச் சினை தீர்ந்த பின்னர் திருமணம் செய்து வைப்பதாகவும் கூறியுள்ளார். இதனால் கனகராஜ், காதலியுடன் அதே பகுதியில் ஒரு வாடகை வீட்டுக்கு சென்று விட்டார்.

இதைத்தொடர்ந்து கனகராஜின் அண்ணன் வினோத் நேற்று முன்தினம் மாலை கனகராஜின் வீட்டுக்கு சென்றார். அப்போது வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து பேசினர். இதனால் அண்ணன்-தம்பிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த வினோத், அரிவாளால் கனகராஜையும், தடுக்க முயன்ற இளம்பெண்ணையும் சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த கனகராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த இளம்பெண்ணை அருகில் இருந்தவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்ய முயன்றதால் வாலிபரை அவரது அண்ணனே கவுரவக்கொலை செய்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித் குமார், மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சென்னகேசவன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திர பிரசாத் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதைதொடர்ந்து தனிப்படை அமைத்து வினோத்தை தேடி வந்தனர்.

பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் துணை சூப்பிரண்டு மணி சம்பவ இடத்திற்கு சென்று அக்கம்பக்கம் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினார். இந்தநிலையில் போலீசாரால் தேடப்பட்டு வந்த வினோத் மேட்டுப்பாளையம் போலீசாரிடம் நேற்று சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இதையடுத்து மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டிருந்த கனகராஜின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் உடல் ஆம்புலன்சில் ஏற்றப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வெள்ளிப்பாளையம் கொண்டு செல்லப்பட்டது. அவரது உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுத காட்சி காண்போரை கண் கலங்க வைத்தது. இதன் பின்னர் கனகராஜ் உடல் கரட்டுமேடு மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இதையொட்டி கொலை நடந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட கனகராஜ் காதலித்த இளம்பெண்ணின் குடும்பத்தினர் மற்றும் கு.ராமகிருஷ்ணன் (தந்தை பெரியார் திராவிடர் கழகம்), சுசி கலையரசன் (விடுதலை சிறுத்தைகள்), இளவேனில், சிற்றரசு (தமிழ்புலிகள்), சிந்தனை சிவா (மக்கள் விடுதலை முன்னணி), மலரவன் (புரட்சி கர இளைஞர் முன்னணி) மற்றும் பல்வேறு அமைப்பினர் நேற்றுக்காலை கோவை கலெக்டர் அலுவ லகம் வந்தனர். அவர்கள் கலெக்டர் ராஜாமணியிடம் மனு அளித்தனர்.

அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

கனகராஜை கொலை செய்த வினோத் மற்றும் அவர் பின்னணியில் இருப்பவர்களை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிதி உதவி அளிப்பதோடு, அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். கவுரவக்கொலையில் ஈடுபட்டவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 

Next Story