இந்து மக்கள் கட்சியினரை கண்டித்து, மக்களவை சபாநாயகருக்கு பெரியார் புத்தகங்கள்,கைத்தடி - தி.மு.க.வினர் தபாலில் அனுப்பினர்
இந்து மக்கள் கட்சியினரை கண்டித்து மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு பெரியாரின் புத்தகங்கள்,கைத்தடியை தி.மு.க.வினர் தபாலில் அனுப்பி வைத்தனர்.
பொள்ளாச்சி,
நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க. உறுப்பினர்கள் பதவி ஏற்கும் போது மக்களவையில் தமிழ் வாழ்க, பெரியார் புகழ் வாழ்க என்று கூறினார்கள். இதனால் நாடாளுமன்றத்தின் புனிதம் கெட்டு விட்டதாக கூறி, கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சியினர் தபாலில் கங்கை நீரை நாடாளுமன்ற மக்களவை சபாநாயகருக்கு அனுப்பி வைத்தனர்.
இதைகண்டித்து கோவை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் பொள்ளாச்சி தலைமை தபால் நிலையத்தில் இருந்து பெரியாரின் புத்தகங்கள், கைத்தடியை அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் தலைமை தாங்கி, அவற்றை தபாலில் அனுப்பி வைத்தார். மேலும் மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு தி.மு.க.வினர் ஒரு கடிதம் அனுப்பினர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
தமிழக தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்கும் போது மக்களவையில் தமிழ் வாழ்க, பெரியார் புகழ் வாழ்க என்று கூறினார்கள். அப்போது அங்கிருந்த பா.ஜனதா உறுப்பினர்கள் இதைஎதிர்த்து கூச்சலிட்டனர். இதன் தொடர்ச்சியாக சிலர் பெரியாரின் பெயரை உச்சரித்ததால் நாடாளுமன்றத்தின் புனிதம் கெட்டு விட்டது. எனவே கங்கை நீரை தெளித்து யாகம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்ய வேண்டும் என்று, கங்கை நீரை சபாநாயகருக்கு தபாலில் அனுப்பியுள்ளனர்.
பெரியார் அகில இந்திய அளவில் அரசியல் பணி, சமுதாய சீர்திருத்த பணி, சாதி ஒழிப்பு பணி ஆகியவற்றை பல்வேறு தடைகளை தாண்டி செய்து வந்தவர். மேலும் கடவுளின் பெயரால், மதத்தின் பெயரால் மற்றும் சாதியின் பெயரால் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை போக்க அரும்பாடுபட்டவர்.
தன்னமலமற்ற அவரின் பல்வேறு சேவைகளை பற்றி முழுமையாக அறியாத சிலர் அவரை பற்றி கொச்சைப்படுத்தி வருகின்றனர். எனவே அவரை பற்றியும், அவரது உழைப்பை முழுமையாக அறிந்து கொள்ளும் வகையில் பெரியாரின் எழுத்துகள், பேச்சு, சிந்தனைகள் மற்றும் அனுபவங்கள் ஆகியவற்றின் தொகுப்பாக வெளிவந்துள்ள புத்தகங்களை நாடாளுமன்ற சபாநாயகர் உள்பட வடநாட்டு உறுப்பினர்களும் படித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் புத்தகங்கள் டெல்லி நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் பெரியாரின் நினைவாக கைத்தடியும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் துணை செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் தர்மராஜ், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் நவநீதகிருஷ்ணன், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் ஜெய்சங்கர் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story