ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை செயல்படுத்துவதில் தஞ்சைக்கு 6-வது இடம் ரூ.480 கோடி மதிப்பில் 21 பணிகள் தீவிரம்


ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை செயல்படுத்துவதில் தஞ்சைக்கு 6-வது இடம் ரூ.480 கோடி மதிப்பில் 21 பணிகள் தீவிரம்
x
தினத்தந்தி 27 Jun 2019 4:30 AM IST (Updated: 27 Jun 2019 12:43 AM IST)
t-max-icont-min-icon

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை செயல்படுத்துவதில் தஞ்சை 6-வது இடத்தில் உள்ளது. இங்கு ரூ.480 கோடி மதிப்பீட்டில் 21 பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தஞ்சாவூர்,

மத்திய அரசின் முதன்மை முயற்சியான “ஸ்மார்ட் சிட்டி” (சீர்மிகுநகரம்) கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் 25-ந்தேதி நகர்ப்புற மேம்பாட்டுத் துறையினரால் மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் 100 சீர்மிகு நகரங்களை நாடு முழுவதும் 5 ஆண்டுகளில் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் குறிக்கோள் மற்றும் வழிகாட்டுதல்களின் படி, முக்கிய உள்கட்டமைப்புகளை வழங்கும் நகரங்களை ஊக்குவிப்பதும் மற்றும் அதன் குடிமக்களுக்கு ஒரு ஒழுக்கமான வாழ்க்கை தரத்தை வழங்குவதும், சுத்தமான மற்றும் நிலையான சுற்றுச்சூழல் மற்றும் “ஸ்மார்ட்“ தீர்வுகளை உருவாக்கி கொடுப்பதும் சீர்மிகு நகரத்தின் நோக்கம். இந்த சீர்மிகு நகரங்களின் கொள்கை மற்ற நகரங்களுக்கு ஒரு ஒளி வீடு போல் செயல்பட ஏற்றதாக உருவாக்கப்படவேண்டும்.

தஞ்சை தேர்வு

2016 -ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20-ந் தேதி “சீர்மிகு நகரம்” (ஸ்மார்ட் சிட்டி) போட்டியில் இரண்டாம் சுற்றில் தமிழகத்தில் உள்ள சீர்மிகு நகரங்களில் ஒன்றாக தஞ்சை தேர்வு செய்யப்பட்டது. தஞ்சையில் அடையாளம் காணப்பட்ட பழைய நகரத்தில் உள்ள2.6 சதுர கிலோமீட்டர் அளவைக் கொண்டது. கிழக்கு, வடக்கு மற்றும் மேற்குப்பகுதிகள் அகழியால் சூழப்பட்டும், தெற்கில் ரெயில் பாதையாலும் சூழப்பட்டுள்ளது.

முதல் சுற்றில் மத்தியஅரசு சீர்மிகுநகரங்களாக மாற்ற இந்திய அளவில் 20 நகரங்களை தேர்ந்தெடுத்து, அதில் தமிழகத்தில் இருந்து சென்னை மாநகராட்சி மற்றும் கோவை மாநகராட்சிஆகியவை சீர்மிகுநகரங்களாக தேர்வு செய்யப்பட்டன. இரண்டாவது சுற்றில் இந்திய அளவில் 40 நகரங்களைத் தேர்ந்தெடுத்து அதில் தமிழகத்தில் 4 நகரங்கள் தேர்வாகின. அவை மதுரை, சேலம், தஞ்சாவூர் மற்றும் வேலூர் ஆகியவை ஆகும்.

ரூ.903 கோடி மதிப்பீடு

அதன்படி தற்போது தஞ்சையில் ஸ்மார்ட் சிட்டி திட்ட சிறப்புநோக்க நிறுவனம் அமைக்கப்பட்டு திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. தஞ்சை சீர்மிகுநகர திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் மொத்ததிட்டங்களின் மதிப்பீடூ ரூ.903 கோடியே 78 லட்சம் ஆகும். இதில் ரூ.14 கோடியே 40 லட்சம் மதிப்பீட்டிலான திட்டம் முடிக்கப்பட்டு விட்டது.

மேலும் 21 திட்டங்கள் ரூ.479 கோடியே 99 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் 3 திட்டங்கள் ரூ.77 கோடியே 6 லட்சம் மதிப்பீட்டில் ஒப்பந்தப்புள்ளி கோரப்படும் நிலையில் உள்ளது. மற்ற திட்டங்கள் பல்வேறு நிலையில் செயல்பாட்டில் உள்ளன.

தஞ்சை 6-வது இடம்

இந்த திட்டத்திற்கு மத்திய அரசு தன் பங்கான ரூ.116 கோடியை விடுவித்துள்ளது. மாநில அரசும் தன்பங்கை விடுவித்துள்ளது. தமிழகத்தில் சீர்மிகு நகர திட்டங்களை செயல்படுத்துவதில் தஞ்சை 6-வது இடத்தில் உள்ளது.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தஞ்சையில் தற்போது குடிநீர் மேம்பாட்டு திட்டம், விடுபட்ட இடங்களில் பாதாள சாக்கடை அமைத்தல், பூங்கா மேம்படுத்தும் பணி மற்றும் குளம் மேம்படுத்தும் பணி, பழைய பஸ் நிலையம் மேம்படுத்தும் பணி, அகழி மேம்படுத்தும் பணி, தஞ்சை காமராஜர் மார்க்கெட், கீழவாசல் சரபோஜி மார்க்கெட் மேம்படுத்தல் பணி, தேங்கியுள்ள திடக்கழிவுகளை தரம் பிரித்து அகற்றுதல் உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறன்றன.

குளங்கள் மேம்படுத்துதல்

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், “குடிநீர் மேம்பாட்டு திட்ட பணிகளின் கீழ் புதிய நீரேற்று நிலையம் அமைத்தல், புதிய ஆழ்துளை கிணறு அமைத்தல், குடிநீர் குழாய்கள் சீரமைத்தல், குடிநீர் தொட்டி கட்டுதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. தஞ்சை சிவகங்கை பூங்கா, மணிக்கூண்டு பூங்கா உள்ளிட்ட பூங்காக்களும் சீரமைக்கப்படுகின்றன. தஞ்சை மேலவீதி அய்யன்குளம், சாமந்தான் குளம் உள்ளிட்ட குளங்களிலும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன”என்றார்.

Next Story