பஸ் மோதி விபத்து: மோட்டார்சைக்கிளில் கணவருடன் சென்ற பெண் சாவு கபிஸ்தலம் அருகே பரிதாபம்


பஸ் மோதி விபத்து: மோட்டார்சைக்கிளில் கணவருடன் சென்ற பெண் சாவு கபிஸ்தலம் அருகே பரிதாபம்
x
தினத்தந்தி 27 Jun 2019 3:45 AM IST (Updated: 27 Jun 2019 12:45 AM IST)
t-max-icont-min-icon

கபிஸ்தலம் அருகே மோட்டார்சைக்கிள் மீது பஸ் மோதியது. இந்த விபத்தில் கணவருடன் சென்ற பெண் பரிதாபமாக இறந்தார்.

கபிஸ்தலம்,

தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே உள்ள கீழ திருப்பூந்துருத்தி கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுபாஷ்சந்திரபோஸ் (வயது54). விவசாயி. இவருடைய மனைவி இந்திராணி (40). இவர்கள் இருவரும் சம்பவத்தன்று கபிஸ்தலம் அருகே மாங்குடி கிராமத்தில் உள்ள தங்களுடைய உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

பின்னர் அங்கிருந்து வீட்டுக்கு மோட்டார்சைக்கிளில் புறப்பட்டனர். மாங்குடி பகுதியில் வந்து கொண்டிருந்தபோது சுவாமிமலையில் இருந்து கும்பகோணம் நோக்கி சென்ற மினிபஸ் ஒன்று மோட்டார்சைக்கிள் மீது மோதியது.

சிகிச்சை பலனின்றி சாவு

இந்த விபத்தில் கணவனும், மனைவியும் மோட்டார்சைக்கிளில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனு மதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இந்திராணி பரிதாபமாக இறந்தார்.

சுபாஷ்சந்திரபோசுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சுவாமிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமலதா மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள மினிபஸ் டிரைவரை வலைவீசி தேடி வருகிறார்கள். 

Next Story