அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் வெள்ளந்தாங்கி அம்மன் ஏரியை சமூக ஆர்வலர்கள் தூர்வாரினர்


அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் வெள்ளந்தாங்கி அம்மன் ஏரியை சமூக ஆர்வலர்கள் தூர்வாரினர்
x
தினத்தந்தி 27 Jun 2019 4:15 AM IST (Updated: 27 Jun 2019 12:59 AM IST)
t-max-icont-min-icon

அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் பெரம்பலூர் வெள்ளந்தாங்கி அம்மன் ஏரியில் தூர்வாரும் பணியை சமூக ஆர்வலர்கள் தொடங்கினர்.

பெரம்பலூர்,

பல ஆண்டுகளாக பெரம்பலூர் நகர் மக்களின் நீராதாரமாகவும், பெரம்பலூர் பகுதி விவசாய தேவைக்கும் பெரும் வரமாக வெள்ளந்தாங்கி அம்மன் ஏரி இருந்து வந்தது. அந்த ஏரியும், அதற்கு நீர் வரத்து வரும் வாய்க்கால்களும் தூர்வாரப்படாமல், தற்போது சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்தும், முட்புதர்கள் மண்டியும், கழிவு நீராலும், பிளாஸ்டிக் குப்பைகளாலும் சீர்குலைந்து காட்சியளிக்கிறது. இதனால் மழைக்காலம் மற்றும் வறட்சி காலங்களில் பெய்யும் மழை நீரை கூட சேமித்து வைக்க முடியாத சூழ்நிலை நிலவியது.

எனவே சின்னாறு வடிநில பகுதி 2-ன் லாடபுரம், குரும்பலூர், செஞ்சேரி, அரணாரை, பெரம்பலூர் மேலேரி, வெள்ளந்தாங்கி அம்மன் ஏரி, துறைமங்கலம் ஏரி, புது ஏரி ஆகிய ஏரிகளையும், அதற்கு நீர் வரத்து வரும் வாய்க்கால்களையும் தூர்வாரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பெரம்பலூர் நகர் பொதுமக்கள், விவசாயிகள் பலமுறை புகார் கொடுத்தும், அவர்கள் நடவடிக்கை எடுத்த பாடில்லை.

அதிகாரிகள் தூர்வார முன்வரவில்லை

அதனை தொடர்ந்து கடந்த திங்கட்கிழமை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்ட சமூக நல கூட்டமைப்பு சார்பில் பெரம்பலூர் நகரில் உள்ள ஏரிகளையும், அதற்கு நீர் வரத்து வரும் வாய்க்கால்களையும் தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு கொடுத்தனர். அதன்பிறகும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஏரிகள், அதற்கு நீர் வரத்து வரும் வாய்க்கால்களை தூர்வார முன்வரவில்லை என்று கூறப்படுகிறது.

இனியும் அதிகாரிகளை நம்பினால் பயன் கிடைக்காது என்று முடிவெடுத்த பெரம்பலூர் மாவட்ட சமூக நல கூட்டமைப்பில் உள்ள சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், விவசாயிகள் ஒத்துழைப்புடன் முதற்கட்டமாக வெள்ளந்தாங்கி அம்மன் ஏரியை தூர்வாரும் பணியை தொடங்கினர். மேலும் 5 பொக்லைன் எந்திரங்கள் வரவழைக்கப்பட்டு ஏரியினுள் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஏரியை தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் பெரம்பலூர் மாவட்ட சமூக நல கூட்டமைப்பின் சமூக ஆர்வலர்கள் ஏரியை தூர்வாருவதை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Next Story