சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலித்த 13 ஊழியர்கள் பணியிடை நீக்கம்


சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலித்த 13 ஊழியர்கள் பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 27 Jun 2019 3:45 AM IST (Updated: 27 Jun 2019 1:05 AM IST)
t-max-icont-min-icon

சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு முடிகாணிக்கை செலுத்தும் பக்தர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலித்த ஊழியர்கள் 13 பேரை பணியிடைநீக்கம் செய்து கோவில் இணை ஆணையர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

சமயபுரம்,

திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் உள்ள மாரியம்மன் கோவில் சக்தி ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். பழனி முருகன் கோவிலுக்கு அடுத்த படியாக பக்தர்கள் கூட்டம் அதிகம் வருவது இங்குதான். இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்வார்கள். இவ்வாறு வரும் பக்தர்கள் ஏராளமானோர் மொட்டை அடித்து முடி காணிக்கை செலுத்துவார்கள். குறிப்பாக ஒரு வாரத்துக்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முடிகாணிக்கை செலுத்துவார்கள். இங்கு முடிகாணிக்கை செலுத்த, ரூ.30 கட்டணம் செலுத்தினால் ஒரு டோக்கன், ஒரு பிளேடு, ஒரு சந்தன வில்லை தரப்படும். இதை எடுத்துக்கொண்டு, முடிகாணிக்கை செலுத்தும் மண்டபத்தில் உள்ள முடி திருத்துபவரிடம் கொடுத்து மொட்டை போட்டுக்கொள்ளலாம்.

கூடுதல் கட்டணம்

இங்கு பக்தர்களுக்கு மொட்டை போடும் பணியில் 160-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் ஒரு மொட்டை போடுவதற்கு ரூ.25 வழங்கப்படும். இதுதவிர முடிகாணிக்கை செலுத்துவதற்காக பக்தர்கள் யாருக்கும் பணம் கொடுக்கவேண்டியதில்லை. இதுபற்றி அந்த பகுதியில் அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் கோவிலுக்கு முடிகாணிக்கை செலுத்தவரும் பக்தர்களிடம் கூடுதலாக ரூ.50-ஐ கட்டாயப்படுத்தி வசூல் செய்யப்படுவதாக வாட்ஸ்-அப்பில் வைரலாக செய்தி பரவியது. இது பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த தகவல் கோவில் நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

13 பேர் பணியிடை நீக்கம்

இதைத்தொடர்ந்து கோவில் இணை ஆணையர் அசோக்குமார் உள்ளிட்டோர் அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். மேலும் ரகசியமாக கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டனர். இதில் அங்கு முடி திருத்தும் பணியில் ஈடுப்பட்டவர்கள் கூடுதல் கட்டணம் வசூல் செய்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கூடுதல் கட்டணம் வசூல் செய்ததாக கார்த்தி, செந்தில், லோகநாதன், ரவி, ராஜேஷ், சதீஸ், பிச்சை, சச்சிதானந்தம், ரெங்கராஜ், சக்திவேல், காமராஜ், வரதன், கோபி ஆகிய 13 பேர் நேற்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இதுகுறித்து கோவில் இணை ஆணையர் நிருபர்களிடம் கூறும்போது, முடிகாணிக்கை செலுத்த கூடுதலாக கட்டணம் வசூலித்த 13 பேரை பணியிடை நீக்கம் செய்துள்ளோம். கட்டணம் தவிர கூடுதலாக யார் பணம் கேட்டாலும் கொடுக்க வேண்டாம். இதுதொடர்பாக பக்தர்கள் அறிந்து கொள்ளும் வகையில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. அதை மீறி யாரும் பணம் கொடுக்க வேண்டாம். மிரட்டி பணம் வசூல் செய்தால் உடனடியாக கோவில் நிர்வாகத்தின் கவனத்திற்கு தெரியப்படுத்த வேண்டும் என்றார். இந்த அதிரடி நடவடிக்கை பக்தர்களின் மத்தியில் வரவேற்பையும், ஊழியர்களின் மத்தியில் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

Next Story