திம்பம் மலைப்பாதை தடுப்பு சுவரில் படுத்திருந்த சிறுத்தை; காரில் சென்றவர்கள் நேரில் பார்த்தனர்
திம்பம் மலைப்பாதை தடுப்பு சுவரில் படுத்திருந்த சிறுத்தையை காரில் சென்றவர்கள் நேரில் பார்த்தனர்.
தாளவாடி,
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதியில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு சிறுத்தை, புலி உள்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
இந்த வனச்சாலை வழியாக திண்டுக்கல்–பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலை வழியாக பஸ், கார், லாரி, வேன், இருசக்கர வாகனங்கள் சென்ற வண்ணம் இருக்கும். மேலும் யானை, சிறுத்தை போன்ற வனவிலங்குகள் நடமாட்டம் அடிக்கடி இந்த பகுதியில் காணப்படும்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை கோவையை சேர்ந்த 3 பேர் தாளவாடியில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர். இவர்கள் தாளவாடி அருகே உள்ள திம்பம் மலைப்பாதையில் 25–வது கொண்டை ஊசி வளைவில் திரும்பியபோது அங்குள்ள தடுப்புசுவரில் ஏதோ உருவம் தென்பட்டது.
உற்று நோக்கி பார்த்தபோது சிறுத்தை தடுப்பு சுவரில் படுத்திருந்தது தெரிய வந்தது. இதனைப்பார்த்த அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். காரை மெதுவாக ஓட்டியபடியே தங்கள் செல்போனில் சிறுத்தையை படம் பிடித்தனர். இதற்கிடையே காரின் முகப்பு விளக்கு பட்டதும் சிறுத்தை தடுப்புச்சுவரில் இருந்து கீழே குதித்து வனப்பகுதிக்குள் ஓடி மறைந்தது. பின்னர் கார் அங்கிருந்து சென்றுவிட்டது.