தமிழக மக்கள் விரும்பும் வரை இருமொழி கொள்கை தொடரும்; மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் தகவல்


தமிழக மக்கள் விரும்பும் வரை இருமொழி கொள்கை தொடரும்; மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் தகவல்
x
தினத்தந்தி 27 Jun 2019 4:00 AM IST (Updated: 27 Jun 2019 1:38 AM IST)
t-max-icont-min-icon

தமிழக மக்கள் விரும்பும் வரை இருமொழி கொள்கை தொடரும் என்று மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் கூறினார்.

பெருமாநல்லூர்,

பா.ஜனதா உறுப்பினர் சேர்க்கை தொடர்பான பயிலரங்கம் பெருமாநல்லூரில் நேற்று நடைபெற்றது. இதற்கு கோட்ட பொதுச்செயலாளர் பாயிண்ட் மணி தலைமை தாங்கினார். இளைஞரணி மாநில செயலர் முருகானந்தம், மாவட்ட தலைவர் சின்னசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் சிறப்புரை ஆற்றினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு பா.ஜனதா உறுப்பினர் சேர்க்கும் பணி அடுத்த மாதம் 6–ந் தேதி தொடங்கி ஆகஸ்டு 10–ம் தேதி வரை நடைபெறும். பிறகு அமைப்பு ரீதியான அடுத்தடுத்து தேர்தல்கள் நடத்தப்படும். பா.ஜனதா உறுப்பினராக சேர செல்போனுக்கு மிஸ்டு கால் கொடுத்தால் போதும். அதுவும் 18 வயதை தாண்டியவர்கள் வாக்களிக்க தகுதியானவர்கள் உறுப்பினராகலாம்.

நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் பா.ஜனதா வெற்றி பெற்று, மீண்டும் 5 ஆண்டு காலம் மோடி பிரதமராக சிறப்பாக ஆட்சி செய்ய உள்ளார். தமிழகம், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் கட்சியை பலப்படுத்த உள்ளோம். பிரதமர் மோடி புறக்கணிக்கப்போகிறாரோ என தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் அரசியல் சாயம் பூச முயற்சிக்கிறார்கள்.

கட்சி சார்பில் அதிக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இல்லாத போது கூட தமிழகத்தில் அதிக வளர்ச்சித் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் தமிழகத்தின் முக்கியப் பிரச்சினைகளான ஜல்லிக்கட்டு, மீனவர் பிரச்சினை, உள்கட்டமைகளுக்காக ஒதுக்கப்படவுள்ள நிதியை ரூ.5 லட்சம் கோடி ஒதுக்கி தமிழகத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக பிரதமர் மோடி இருந்துள்ளார். எனவே தமிழகத்தின் வளர்ச்சி என்பது இந்தியாவின் ஒருங்கிணைந்த வளர்ச்சியாகும்.

தேசிய அளவில் புதிய கல்வி கொள்கை வரைவு அறிக்கை வெளியிடப்பட்டது. இதில் மும்மொழிக் கொள்கையை தமிழகம் ஏற்கவில்லை. எனவே தமிழக மக்கள் விரும்பும் வரை இருமொழி கொள்கையே தொடரும். எந்த மொழியாக இருந்தாலும் கற்றுக்கொள்வதற்கு அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒரு வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும். இது குறித்து அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும். மொழியை தாண்டி தேசிய கல்விக் கொள்கையை யாரும் விவாதிக்காமல் இருக்கிறார்கள் என்பது வருத்தமளிக்கிறது. அறிவியல் மாதிரியான பாடங்களைக் கூட தாய் மொழியில் கற்றுக்கொடுக்க வேண்டும் என தேசிய கல்விக்கொள்கை கூறியிருக்கிறது.

எனவே நமது வருங்கால தலைமுறைகளுக்காக, 450–க்கும் மேற்பட்ட பக்கங்களை கொண்ட வரைவு அறிக்கையை அனைவரும் படித்து, ஜூன் 30–ந் தேதிக்குள் கருத்துகளை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். அதேபோல தமிழகத்தில் குடிநீருக்காக கூட நாள்கணக்கில் பெண்கள் காத்துக் கிடக்கின்ற மிக மோசமான நிலைமை உள்ளது. மழை போதுமான அளவு பெய்யவில்லை என்றாலும் கூட, நீர் மேலாண்மை பொறுப்பினை அனைவரும் ஏற்று, குளம், குட்டை, ஏரி உள்ளிட்ட நீர்நிலைகளை காப்பாற்ற முயற்சிக்க வேண்டும். மழைநீர் சேகரிப்புத் திட்டங்கள், நீர் ஆதாரங்களை மிகச்சரியாகப் பயன்படுத்துதல் உள்ளிட்ட நீர் மேலாண்மை தொடர்பான பல்வேறு பயிற்சிகளை, தகவல்களை குழந்தைகளுக்கு பள்ளியிலேயே பாடத்திட்டமாக மாற்ற வேண்டிய சூழலுக்கு வந்து கொண்டிருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story