ஜிப்மர் சார்பில் அமைய உள்ள உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மையத்துக்கு 50 ஏக்கர் நிலம் அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ் தகவல்
ஜிப்மர் சார்பில் அமைய உள்ள உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மையம் அமைக்க 50 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ் கூறியுள்ளார்.
புதுச்சேரி,
புதுவை அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் டெங்கு நோயை கட்டுப்படுத்தும் வகையில் வாகன பிரசாரம் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த பிரசாரத்தினை புதுவையில் 3 வாகனங்களும், காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய பகுதிகளில் தலா ஒரு வாகனமும் 5 முதல் 10 நாட்கள் வரை மேற்கொள்ள உள்ளன.
இதேபோல் பாகூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு புதிய ஆம்புலன்ஸ் வாங்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு மற்றும் டெங்கு விழிப்புணர்வு பிரசாரம் தொடக்க நிகழ்ச்சி சட்டசபை வளாகத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ், தனவேலு எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்துகொண்டு கொடியசைத்து தொடங்கிவைத்தனர்.
நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் ராமன், தேசிய சுகாதார திட்ட இயக்குனர் மோகன்குமார், சுகாதாரத்துறை துணை இயக்குனர்கள் ரகுநாதன், அல்லிராணி, முருகன், சுந்தர்ராஜ், உதவி இயக்குனர் கணேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ் நிருபர்களிடம் கூறியதாவது:–
புதுவை மக்களின் சுகாதாரத்தினை மேம்படுத்த அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது ஜிப்மர் ஆஸ்பத்திரி சார்பில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மையம் அமைக்க சேதராப்பட்டு பகுதியில் 50 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.
காரைக்காலில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரி கட்டுமான பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது. விரைவில் இந்த மருத்துவமனை திறக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ் கூறினார்.