பள்ளிபாளையம் அருகே தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் வாலிபர் கைது


பள்ளிபாளையம் அருகே தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் வாலிபர் கைது
x
தினத்தந்தி 27 Jun 2019 4:00 AM IST (Updated: 27 Jun 2019 2:35 AM IST)
t-max-icont-min-icon

பள்ளிபாளையம் அருகே தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

பள்ளிபாளையம்,

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளிக்கு நேற்று காலை தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசியவர், அந்த பள்ளிக்கு வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், மதியம் 1 மணிக்கு வெடிக்கும் எனவும் கூறி விட்டு துண்டித்து விட்டார். இதுபற்றி பள்ளியின் தலைமை ஆசிரியர் பெரியசாமி பள்ளிபாளையம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தமூர்த்தி உத்தரவின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் யுவராஜ், ஏட்டுகள் ராமு, மணிகண்டன் மற்றும் போலீசார் பள்ளிக்கு வந்தனர். அங்கு சோதனை நடத்தினார்கள். ஆனால் பள்ளியில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. அது வெடிகுண்டு மிரட்டல் என்று தெரியவந்தது. பின்னர் தலைமை ஆசிரியருக்கு வந்த தொலைபேசி எண்ணை ஆய்வு செய்தனர்.

கைது

இதையடுத்து அங்கிருந்து போலீசார் திரும்பி வந்து கொண்டிருந்தனர். வழியில் வெப்படை பஸ்நிறுத்தத்தில் நின்ற ஒரு வாலிபர் போலீசாரை பார்த்ததும் ஓட முயன்றார். உடனே போலீசார் அந்த வாலிபரை அழைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த வாலிபர் தான் பள்ளிக்கு போன் செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் என்று தெரியவந்தது.

இதையடுத்து வாலிபரை போலீசார் கைது செய்தனர். கைதான அவர் 18 வயது ஆனவர். குமாரபாளையம் பகுதியை சேர்ந்தவர். வெளியூர்களில் பள்ளிகளில் குறும்படம் காண்பிக்கும் வேலையை செய்து வந்த அந்த வாலிபர் தற்போது வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தது தெரியவந்தது. விளையாட்டு தனமாக பள்ளிக்கு போன் செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார். கைதான அந்த வாலிபரை கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார் பின்னர் கோவையில் உள்ள சிறுவர் சிறையில் அடைக்க அழைத்து சென்றனர்.

Next Story