மானாமதுரை வைகையாற்றில் தரைப்பாலம் அமைக்க நடவடிக்கை


மானாமதுரை வைகையாற்றில் தரைப்பாலம் அமைக்க நடவடிக்கை
x
தினத்தந்தி 27 Jun 2019 3:45 AM IST (Updated: 27 Jun 2019 2:52 AM IST)
t-max-icont-min-icon

மானாமதுரை வைகையாற்றில் தரைப்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

மானாமதுரை,

மானாமதுரையில் உள்ள குண்டுராயர் தெரு, அண்ணாசிலை ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில் ஏற்கனவே உயர் மட்ட பாலம் அமைக்கப்பட்டு இந்த பாலத்தில் தற்போது போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மானாமதுரை கன்னார்தெரு பகுதி, பழைய பஸ் நிலையம் ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில் வைகையாற்றுக்குள் கூடுதலாக தரைப்பாலம் அமைக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்திருந்தனர்.

கடந்த 20 ஆண்டுகள் இந்த பகுதியில் மேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்தந்த காலத்தில் இருந்த ஆட்சியாளர்கள் கூறி வந்தாலும் அந்த திட்டம் நிவேற்றப்படவில்லை. இந்நிலையில் நடந்து முடிந்த மானாமதுரை தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மானாமதுரை மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக உள்ள இந்த வைகையாற்றில் தரைப்பாலம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். அதன்படி மானாமதுரை வைகையாற்று பகுதிக்குள் மேற்கண்ட பகுதிகளை இணைக்கும் வகையில் தரைப்பாலம் அமைக்க திட்ட மதிப்பீடு தயாரிக்கும்படி நெடுஞ்சாலைத்துறையினருக்கு அரசு உத்தரவிட்டது.

இதையடுத்து மானாமதுரை தொகுதி எம்.எல்.ஏ. நாகராஜன், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் பாக்கியலெட்சுமி, உதவி பொறியாளர் முத்து ஆகியோர் வைகையாற்றில் பாலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இது குறித்து எம்.எல்.ஏ. நாகராஜன் கூறியதாவது:– மானாமதுரை தொகுதி இடைத் தேர்தலில் வெற்றி பெற்றதும் மானாமதுரை தொகுதி மக்களுக்கு தேவையான திட்டங்கள் குறித்து முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் தனித்தனியாக கோரிக்கை மனுக்கள் வழங்கினேன். அதன்படி தற்போது மானாமதுரை வைகையாற்றுக்குள் கூடுதல் பாலம் அமைக்க திட்ட மதிப்பீடு தயாரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி இந்த கள ஆய்வு நடத்தப்பட்டது.

இனி பாலம் அமைக்கும் திட்டத்திற்கான மதிப்பீடு தயாரித்து அரசுக்கு அனுப்பி ஒப்புதல் கிடைக்கப் பெற்று நிதி ஒதுக்கீடு செய்த பின்னர் முதல்–அமைச்சர் பழனிசாமி பாலம் அமைய உள்ள திட்டம் குறித்து அறிவிப்பார். அதன் பின்னர் விரைவில் பாலம் கட்டும் பணி நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் அ.தி.மு.க. நகர செயலாளர் விஜி.போஸ், நகர் கூட்டுறவு வீட்டு வசதி சங்க தலைவர் தெய்வேந்திரன், அ.தி.மு.க முன்னாள் ஒன்றிய செயலாளர் ஜெயபிரகாஷ், இளையான்குடி ஒன்றிய செயலாளர் பாரதிராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story