பயிர் காப்பீடு செய்ய விண்ணப்பிக்கலாம் கலெக்டர் அழைப்பு
பயிர் காப்பீடு செய்ய விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் சிவஞானம் கூறியுள்ளார்.
விருதுநகர்,
கலெக்டர் சிவஞானம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
பிரதம மந்திரியின் புதிய பயிர் காப்பீட்டு திட்டத்தின்படி மக்காச்சோளம், கம்பு, சோளம், பாசிப்பயறு, உளுந்து மற்றும் பருத்தி பயிரில் பயிர் காப்பீடு பதிவு செய்ய வருகிற செப்டம்பர் மாதம் 30–ந் தேதி கடைசி நாள் ஆகும். துவரை பயிருக்கு ஆகஸ்ட் 31–ந் தேதியும் நிலக்கடலை மற்றும் எள் பயிருக்கு செப்டம்பர் 15–ந் தேதியும், தோட்டக்கலை பயிர்களில் வாழை, வெங்காயம், கொய்யாவுக்கு செப்டம்பர் 30–ந் தேதியும் மாமரத்துக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 28–ந் தேதியும் கடைசி நாள் ஆகும்.
பயிர் காப்பீடு கட்டணமாக மக்காச்சோளத்துக்கு ஏக்கருக்கு ரூ.474 எனவும், சோளப்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.218 எனவும், கம்பு பயிருக்கு ஏக்கருக்கு ரூ.200 எனவும், பாசிப்பயறு, உளுந்து, துவரை பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ. 315 எனவும், நிலக்கடலைக்கு ஏக்கருக்கு ரூ.430 எனவும், எள் பயிருக்கு ரூ.170 எனவும், பருத்திக்கு ஏக்கருக்கு ரூ.1,135 எனவும், தோட்டக்கலை பயிர்களில் வாழைக்கு ஏக்கருக்கு ரூ.3,025 எனவும், வெங்காயம் பயிருக்கு ரூ.1,410 எனவும், மா பயிருக்கு ரூ.1,025 எனவும், கொய்யாவுக்கு ரூ.788 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் பயிர் காப்பீடு திட்டம் அக்ரிகல்ச்சுரல் இன்சூரன்ஸ் கம்பெனி மூலம் செயல்படுத்தப்படவுள்ளது. பயிர்க் கடன் பெறும் விவசாயிகள், கடன் பெறும் வங்கிகளில் கட்டாயமாக பயிர் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்யப்படுவர். கடன் பெறாத விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், பொது சேவை மையங்கள் மற்றும் தேசிய வங்கிகளின் மூலமாகவோ பயிர் காப்பீடு பதிவு செய்ய வேண்டும்.
பயிர்காப்பீடு பதிவு செய்யும்போது விவசாயிகள் தங்களது முன்மொழிவு விண்ணப்பத்துடன் பதிவு விண்ணப்பம், பட்டா, அடங்கல், வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்கம் மற்றும் ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து ரசீதை பெற்றுக் கொள்ளலாம். காப்பீடு செய்து பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.