கர்நாடகத்தில் தமிழ் மொழியை தக்கவைக்க கருத்தரங்கு பெங்களூரு தமிழ் சங்கத்தில் 29-ந் தேதி நடக்கிறது
கர்நாடகத்தில் தமிழ் மொழியை தக்க வைப்பது தொடர்பான கருத்தரங்கு வருகிற 29-ந் தேதி பெங்களூரு தமிழ் சங்கத்தில் நடக்கிறது.
பெங்களூரு,
கர்நாடக தமிழ் ஆசிரியர்கள் சங்க தலைவர் பேராசிரியர் க.சுப்பிரமணியன் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
வேலை வாய்ப்பில் முன்னுரிமை
கர்நாடகத்தில் தொடக்க காலத்தில் தமிழ் பள்ளிகள் அதிக எண்ணிக்கையில் இருந்தன. அது தற்போது குறைந்து வருகிறது. இது கவலை அளிப்பதாக உள்ளது. நான் தமிழ் ஆசிரியராக பணியாற்றிய காலத்தில் மாணவர்கள் தமிழ் கற்பதில் ஆர்வம் காட்டினர். கர்நாடகத்தில் கன்னடத்தில் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று சரோஜி மகிஷி அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டது.
அதன் பிறகு தமிழ் படிப்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது. கர்நாடகத்தில் இருந்து கொண்டு தமிழில் படித்தால் என்ன பயன் என்ற மனநிலைக்கு பெற்றோர் வந்துவிட்டனர். இதன் காரணமாக தமிழ் மொழி கற்றல் என்பது மிக குறைவாக உள்ளது. கடந்த ஆண்டு 10-ம் வகுப்பில் தமிழ் வழியில் படித்தவர்களின் எண்ணிக்கை 173 தான். சில பள்ளிகளில் தற்போது 10-ம் வகுப்பில் 2, 3 மாணவர்கள் உள்ளனர்.
கற்றலை ஊக்குவித்தோம்
ஆனால், 8, 9-ம் வகுப்புகளில் தமிழ் வழியில் படிப்பவர்களில் ஒருவர் கூட இல்லை என்பது வேதனையான ஒன்று. நாங்கள் பணியாற்றியபோது, தமிழ் வழி கல்வி கற்றலை ஊக்குவித்தோம். நாங்கள் பணி இடமாறுதல் பெற்று சென்ற பிறகு, அதை முன்னெடுத்து செல்ல யாரும் இல்லை. எனது மகனை தமிழ் வழியில் படிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், நான் தமிழ்நாட்டில் சேர்த்து அவரை படிக்க வைத்தேன்.
தமிழ் வழியில் குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும் என்ற உணர்வு பெற்றோருக்கு ஏற்பட வேண்டும். தமிழ் வழியில் சேர்க்க வாய்ப்பு இல்லாவிட்டால், குறைந்தபட்சம் தமிழை ஒரு பாடமாக எடுத்து படிக்க வேண்டும். இதன் மீது பெற்றோர் கவனம் செலுத்த வேண்டும்.
கருத்தரங்கு
கர்நாடகத்தில் தமிழ் மொழியை தக்க வைத்தல் மற்றும் ஊக்குவித்தல் என்ற பெயரில் தமிழ் ஆசிரியர்களுக்கான கருத்தரங்கு வருகிற 29-ந் தேதி பெங்களூருவில் உள்ள தமிழ் சங்க அலுவலகத்தில் நடக்கிறது. தமிழ் கற்பித்தலில் புதிய முறைகள், கர்நாடக தமிழ் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரித்தல் போன்ற தலைப்புகளில் பயிலரங்கம் நடக்கிறது.
இதில் கர்நாடகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பணியாற்றும் 100-க்கும் மேற்பட்ட தமிழ் ஆசிரியர்கள் கலந்து கொள்கிறார்கள்.
இவ்வாறு க.சுப்பிரமணியன் கூறினார்.
இந்த பேட்டியின்போது, தமிழ் ஆசிரியர்கள் சங்க செயலாளர் கார்த்தியாயினி, தமிழ் சங்க முன்னாள் தலைவர் தி.கோ.தாமோதரன், ஐ.டி.ஐ. தமிழ் மன்ற தலைவர் பாஸ்கர் உள்ளிட்டோர் இருந்தனர்.
Related Tags :
Next Story