திருவள்ளூரில் வளர்ச்சிப்பணிகள் குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர்கள் ஆய்வு
திருவள்ளூரில் மாவட்ட வளர்ச்சிப்பணிகள் குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர்கள் ஆய்வு நடத்தினர்.
திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்டத்தில் வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்வது குறித்து அனைத்து துறை முதல்நிலை அலுவலர்கள் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு ஊரக தொழில்துறை அமைச்சர் பென்ஜமின், தமிழ் ஆட்சிமொழி, கலை பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
இதில் எம்.எல்.ஏ.க்கள் சிறுணியம் பி.பலராமன், நரசிம்மன், விஜயகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகோபாலன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் அனைத்து துறை பணிகளின் முன்னேற்றம் குறித்து தொடர்புடைய துறை அலுவலர்களிடம் ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வின் போது பணிகளின் செயல்பாடு குறித்து பிரதான துறைகளான வேளாண்மை, வேளாண் பொறியியல் துறை, தோட்டக்கலைத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, கால்நடை பராமரிப்பு துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள், பள்ளிக்கல்வி, பொதுசுகாதாரம், பொதுப்பணித்துறை, குடிசை மாற்று வாரியம், இந்து சமய அறநிலையத்துறை, மீன்வளத்துறை உள்பட 26 துறைகளை சேர்ந்த முதல்நிலை அலுவலர்களிடம் திட்டப்பணிகளின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தனர்.
மேலும் அனைத்து பணிகளையும் தரமாக விரைந்து முடிக்கவும் ஆலோசனை வழங்கப்பட்டது. மேலும் நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடிக்கவும், பொதுமக்களுக்கு அரசு திட்டங்கள் சேர்வதில் அரசு அதிகாரிகள் முனைப்புடன் செயல்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.
பின்னர் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 29 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 59 ஆயிரத்து 912 மதிப்பில் 12 பயனாளிகளுக்கு தையல் எந்திரங்களையும், 2 பயனாளிகளுக்கு சலவைப் பெட்டிகளையும், 15 இஸ்லாமிய பயனாளிகளுக்கு நிதியுதவி போன்றவற்றை அமைச்சர்கள் பென்ஜமின், பாண்டியராஜன், கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் ஆகியோர் வழங்கினார்கள்.