மணல் குவாரி அமைக்க அதிகாரிகள் ஏற்பாடு, பணிகளை தடுத்து நிறுத்தி பொதுமக்கள் போராட்டம் - திருவெண்ணெய்நல்லூர் அருகே பரபரப்பு
திருவெண்ணெய்நல்லூர் அருகே மணல் குவாரி அமைக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து பணிகளை தடுத்து நிறுத்தி பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அரசூர்,
திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள அண்ட்ராயனூர் தென்பெண்ணையாற்றில் மணல் குவாரி அமைக்க பொதுப்பணித்துறையினர் முடிவு செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியனை சந்தித்து, அண்ட்ராயனூரில் மணல் குவாரி அமைக்கக்கூடாது என முறையிட்டனர்.
இந்நிலையில் அண்ட்ராயனூர் தென்பெண்ணையாற்றில் மணல் குவாரி அமைப்பதற்காக நேற்று காலை 10 மணியளவில் போலீஸ் பாதுகாப்புடன் பொதுப்பணித்துறையினர் வந்தனர். அவர்கள், மணல் அள்ள வரும் லாரிகளுக்கு டோக்கன் கொடுக்கும் அலுவலகம் கட்டும் பணியை தொடங்க ஏற்பாடு செய்தனர்.
இதையறிந்த அண்ட்ராயனூர், டி.புதுப்பாளையம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் அங்கு திரண்டு வந்து பணிகளை தடுத்து நிறுத்தி பொதுப்பணித்துறையினரிடம் கடும் வாக்குவாதம் செய்ததோடு மணல் குவாரி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
அப்போது இங்கு மணல் குவாரி அமைந்தால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து குடிநீர் பஞ்சம் ஏற்படும். விவசாயத்திற்கும் தண்ணீர் இல்லாமல் போகும். எனவே இங்கு மணல் குவாரி அமைக்கக்கூடாது என்று பொதுமக்கள் வலியுறுத்தினர்.
இதுகுறித்த தகவல் அறிந்ததும் உளுந்தூர்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு பாலச்சந்தர், திருவெண்ணெய்நல்லூர் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி ஆகியோர் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது இந்த பிரச்சினை சம்பந்தமாக தாசில்தார் மூலமாக பொதுமக்களை அழைத்து சமாதான கூட்டம் நடத்தி தீர்வு காணுங்கள் என்றும் அந்த கூட்டத்தில் சுமூக முடிவு ஏற்பட்டால் மணல் குவாரியை திறப்பது குறித்து முடிவு செய்யுங்கள் என்றும் பொதுப்பணித்துறையினருக்கு போலீஸ் அதிகாரிகள் அறிவுறுத்தினர். இதனை ஏற்றுக்கொண்ட பொதுப்பணித்துறையினர், மணல் குவாரி அமைப்பதற்கான ஏற்பாட்டை தற்காலிகமாக கைவிட்டு அங்கிருந்து திரும்பிச்சென்றனர். அதன் பிறகு பொதுமக்களும் தங்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த போராட்டத்தினால் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story