விருத்தாசலத்தில், ஏலச்சீட்டு நடத்தி ரூ.1¼ கோடி மோசடி - பெண் கைது


விருத்தாசலத்தில், ஏலச்சீட்டு நடத்தி ரூ.1¼ கோடி மோசடி - பெண் கைது
x
தினத்தந்தி 27 Jun 2019 4:00 AM IST (Updated: 27 Jun 2019 4:28 AM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலத்தில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.1¼ கோடி மோசடி செய்ததாக ஒரு பெண்ணை போலீசார் கைது செய்தனர். இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கடலூர்,

விருத்தாசலம் கம்பர்வீதியை சேர்ந்த சுந்தர்சிங் என்பவருடைய மனைவி கீதாபாய்(வயது 46). இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விருத்தாசலத்தில் ஏலச்சீட்டு மற்றும் தீபாவளி சீட்டு நடத்தி வந்தார். இவரது ஏலச்சீட்டு மற்றும் தீபாவளி சீட்டு திட்டத்தில் சேர்ந்து மாதந்தோறும் பணம் செலுத்திய சந்தாதாரர்களுக்கு முதிர்வு தொகையை கொடுக்காமல் கீதாபாய் மோசடி செய்து விட்டதாக கூறப்படுகிறது. அந்த வகையில் 30 பேரிடம் சுமார் ஒரு கோடியே 27 லட்சம் ரூபாயை மோசடி செய்து விட்டு கீதாபாய் தலைமறைவாகிவிட்டார் என தெரிகிறது.

இது பற்றி விருத்தாசலத்தை சேர்ந்த ராஜலட்சுமி என்பவர் கடலூர் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். இதையடுத்து பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு அறிவழகன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் முரளி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். இந்த வழக்கில் கீதாபாய் தலைமறைவாக இருந்ததால் அவரை கைது செய்ய கடலூர் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் பிடிவாரண்டு பிறப்பித்தது.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் முரளி தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வடிவேல், ஏட்டுகள் லட்சுமி, மணிமொழி, பவானி ஆகியோர் அடங்கிய போலீஸ் படையினர் நேற்று விருத்தாசலத்தில் கீதாபாயை கைது செய்தனர். பின்னர் அவரை கடலூர் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். அவரை அடுத்த மாதம் 8-ந்தேதி வரை சிறையில் அடைக்க தலைமை குற்றவியல் நடுவர் திருவேங்கடசீனுவாசன் உத்தரவிட்டார். இதையடுத்து கீதாபாயை போலீசார் கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.


Next Story